"வைகை ஆற்றில் மிதக்கும் மனுக்கள்" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம், மக்கள் குறை உடனுக்குடன் நிவர்த்தி செய்ப்படும் எனக்கூறி இந்த திமுக அரசால் வாங்கப்பட்ட மனுக்கள், இன்று சிவங்கங்கை வைகை ஆற்றில் கப்பையாக கொட்டப்பட்டுள்ளதற்கு, எனது கடும் கண்டனங்கள்.
எதிர்க்கட்சியாக இருந்த போது ஊர் ஊராக சென்று பொதுமக்களிடமிருந்து வாங்கிய மனுக்கள், கறுப்பு பெட்டிகளில் இன்னும் பூட்டப்பட்டுள்ளது, சாவியை காணவில்லை. நீட் ஒழிப்பு வாக்குறுதி கொடுத்து ஆளுங்கட்சியான பிறகு கூட வெற்று நீட் ஒழிப்பு மாநாடு நடத்தி மாணவர்களிடம் வாங்கிய கையெழுத்து படிவங்களை கூட காற்றில் பறக்க விடப்பட்டு குப்பையாக்கப்பட்டது.
உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் திமுக அரசு விளம்பரத்திற்காக ஆரம்பித்த திட்டத்தின் மனுக்கள் இன்று அஸ்தியை கரைப்பது போல, சிவங்கங்கை வைகையாற்றில் மீண்டும் குப்பை ஆக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. மக்களின் வலிகளை, உணர்வுகளை, வேதனைகளை புரிந்து கொள்ள இயலாமல் , அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது போல் நாடகமாடி, உங்களுடன் ஸ்டாலின் என்ற கண்துடைப்பு நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்த திமுக அரசிற்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.