வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான மனுக்கள் - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது வாக்கெடுப்பு நடத்தியதில் மசோதாவுக்கு ஆதரவாக 288 எம்.பி.க்கள் மற்றும் எதிராக 232 எம்.பி.க்கள் வாக்களித்தனர். இதை அடுத்து வக்ஃப் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா ஏப்ரல் 4 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது வாக்கெடுப்பு நடத்தியதில் மசோதாவிற்கு ஆதரவாக 128 எம்.பி.க்கள் மற்றும் எதிராக 95 எம்.பி.க்கள் வாக்களித்தனர். இதையடுத்து வக்ஃப் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து மத்திய சட்ட அமைச்சகத்தின் சார்பில் வக்ஃப் மசோதா குடியரசு தலைவர் திரெளபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கினார். இந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அரசிதழில், "வக்ஃப் சட்டம் ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை வருகின்றது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு இன்று (புதன்கிழமை) விசாரிக்கிறது.