சீன லைட்டர், உதிரிபாகங்கள் விற்பனையை தடுக்கக் கோரி #UnionFinanceMinister நிர்மலா சீதாராமனிடம் மனு!
சீன லைட்டர் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனையை தடுக்கக்கோரி தேசிய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாகவே சீன லைட்டர் விற்பனையால் தீப்பெட்டி விற்பனை மந்தமடைந்து வருவதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சீன லைட்டர் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனையை தடுக்கக் கோரி தேசிய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அதன் துணைத் தலைவர் கோபால்சாமி தலைையில் அதன் நிர்வாகிகள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
‘7 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும் தீப்பெட்டி தொழிலுக்கு பாதகமாக உள்ள சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் மற்றும் உதிரிபாகங்கள் நாடு முழுவதும் விற்பனையில் உள்ளன. ஏற்கனவே இந்த லைட்டரை தடை செய்து ஆணை பிறப்பித்தும், அதன் விற்பனை தொடர்ந்து கொண்டு வருகிறது. இதனால் சுமார் 600 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
மேலும் சீன லைட்டர் விற்பனையால், தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இதனால் இந்த தொழிலை நம்பியுள்ள 7 லட்சம் பேரின் வாழ்வாதாரமும் கடும் பாதிப்படைந்துள்ளது. எனவே தடைசெய்யப்பட்ட சீன சிகரெட் லைட்டர் விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை வேண்டும். லைட்டர் உதிரிபாக இறக்குமதியை தடுக்கும் வகையில், தடைசெய்யப்பட்டது (Restricted) என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும்”
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.