சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட கோரி மனு - தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
தமிழ்நாடு சட்டப் பாதுகாப்பு இயக்க உறுப்பினர் சதீஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
“தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் 69% இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டு
உள்ளது. இந்தச் சட்டம் அரசியலமைப்பின் அட்டவணையின் கீழ் கொண்டுவரப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் தற்போது மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் மட்டுமே இடஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும்.
மேலும், பல ஆண்டுகளாக இந்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல
மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனு தற்போது உச்ச நீதிமன்றத்தில்
நிலுவையில் உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.மேலும், பீகார், உள்ளிட்ட மாநிலங்களில் எடுக்கப்பட்டு உள்ளது.
எனவே, 2020 அன்று வெளியிட்ட அரசாணை படி, தமிழ்நாட்டில் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என மனுவில் கூறி உள்ளார். இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், பீகார்
ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி
உள்ளன. எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கூறினார்.
இதனைக்கேட்ட நீதிபதிகள், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது. வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. எந்த உத்தரவும்
பிறப்பிக்க விரும்பவில்லை என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.