ஜாபர் சேட் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிப்பது குறித்த மனு - #SupremeCourt திட்டவட்டம்!
ஜாபர் சேட் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிப்பது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தான் முடிவெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2006-2011 திமுக ஆட்சி காலத்தில், சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாகப் பெற்றதாக ஓய்வு பெற்ற காவல் துறை டிஜிபி ஜாபர் சேட், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை 2011-ம் ஆண்டு ஊழல் வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை 2020- ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சேட் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தனக்கு எதிரான ஊழல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 2019-ம் ஆண்டு ரத்து செய்துள்ள நிலையில், அமலாக்கத் துறை வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்கக் கூடாது எனவும், தனது மனைவிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிந்த வழக்கு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தன் மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம்
அமர்வு, ஜாபர் சேட்க்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனிடையே, இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ஆக. 23-ம் ஆண்டு ஜாபர் சாதிக் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. வழக்கின் விளக்கங்களை பெற விசாரணையை ஆக.28-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து, ஜாபர் சேட் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் சங்கர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அதில், “சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு தடை விதித்து, அதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இந்த மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், ஜாபர் சேட் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க கோரி அவரது சார்பில் உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா முன்பு முறையீடு செய்யப்பட்டது. ஆனால், வழக்கை விரைந்து விசாரிப்பது தொடர்பான கோரிக்கை மீது தலைமை நீதிபதி தான் முடிவெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.