ஆளுநர் ரவியை பதவி நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றது முதலாக திமுக அரசுக்கும், அவருக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது மட்டுமல்லாமல் திமுகவின் கொள்கைகளையும் விமர்சிக்க தொடங்கினார். தற்போது வரை இந்த மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.
திமுக மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல கட்சிகளும் ஆளுநரின் செயல்களை விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என்.ரவியை உடனடியாக பதவி நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். “ஆளுநரின் செயல்பாடு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது. ஆளுநரின் செயல்பாடு அவருக்கு தமிழக ஆளுநராக செயல்பட விரும்பும் இல்லாததையே காட்டுகிறது. அவர் விளம்பரம் தேடும் நோக்கிலேயே செயல்பட்டு வருகிறார். அரசியல் சாசனத்தை மீறி அவர் நடந்து வருகிறார். எனவே அவரை நீக்க வேண்டும்” என அந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.