For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டிற்கு மேலும் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!

10:36 AM May 24, 2024 IST | Web Editor
தமிழ்நாட்டிற்கு மேலும் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்  தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி
Advertisement

தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் அரசுக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 5,225 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 3,300 இடங்களும் இருக்கின்றன. மாநிலத்தின் மக்கள் தொகையைப் பொறுத்தவரை, 2011-ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்போது 7 கோடியே 21 லட்சமாக இருந்தது. தற்போது சுமார் 8 கோடியை கடந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறைகளின்படி, தற்போது தமிழ்நாட்டில் சுமார் 8,300 எம்பிபிஎஸ் இடங்கள் வரை இருக்கலாம்.

ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை 8,500 தாண்டிவிட்டது. இதனிடையே, குறிப்பிட்ட அளவுக்கு மேல் மருத்துவ இடங்களைக் கொண்டிருக்கும் மாநிலங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க அனுமதி கிடையாது என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் முதற்கட்டமாக புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைய உள்ளன. பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டையில் இரண்டாவது கட்டமாக புதிய மருத்துவக்கல்லூரிகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படும் மருத்துவ கல்லூரிக்கான 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மே 6-ம் தேதி நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட 9 உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிலையில் தான், தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே 35 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலையில், மேலும் 6 கல்லூரிகள் நிறுவ அனுமதி கிடைத்துள்ளது. இதுதவிர, 2 அரசு பல்மருத்துவக் கல்லூரிகளும், 2 அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளும், ஒரு அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியும், ஒரு அரசு யூனானி மருத்துவக் கல்லூரியும், ஒரு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியும், ஒரு அரசு யோகா மருத்துவக் கல்லூரியும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement