நிரந்தர வரிவிதிப்பு - ட்ரம்பை விமர்சித்த எலான் மஸ்க் சகோதரர்!
அமெரிக்காவின் பொருட்களுக்கு ஒவ்வொரு நாடுகளும் விதிக்கும் வரிகளை போல் அமெரிக்காவும் அந்த நாடுகளுக்கு விதிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் அதிக அளவிலான வரிகளை நிரந்தர வரி எனவும் அதை வெறுப்பதாகவும் எலான் மஸ்க் சகோதரர் கிம்பல் விமர்சித்துள்ளார்.
கடந்த வாரம் ட்ரம்பின் வரி உயர்வு அறிவிப்பால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சரிவை கண்டுள்ள நிலையில் அவரின் சகோதரர் கிம்பலிடமிருந்து இந்த கருத்து வெளிவந்துள்ளது. வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது;
“யார் நினைத்திருப்பார்கள் அதிக வரிகளை விதிக்கும் அதிபராக ட்ரம்ப் இருப்பார் என. தனது வரி உத்தி மூலம், டிரம்ப் அமெரிக்க நுகர்வோர் மீது ஒரு கட்டமைக்கப்பட்ட நிரந்தர வரியை அமல்படுத்தியுள்ளார்.
வரி விதிப்பின்மூலம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து வேலைவாய்ப்பை அதிகரித்தாலும், பொருள்களின் விலை அதிகமாகவே இருக்கும். அனைத்துவகையான பொருள்களையும் நம்மால் (அமெரிக்காவால்) உற்பத்தி செய்ய முடியாததால், நுகர்வோர் அதிக விலைக்கொடுத்து பொருள்களை வாங்க வேண்டியிருக்கும்.
அதிக வரியானது குறைந்த நுகர்வு பொருள்களுக்கு வழிவகுக்கிறது. அதாவது, நுகர்வு பொருள்கள் மீதான அதிக வரியானது, பொருள்களை வாங்கும் அளவைக் குறைக்கும். இதன் எதிரொலியாக வேலைவாய்ப்பும் குறையும்.
அமெரிக்காவிற்கு நம்பமுடியாத பலங்கள் உள்ளன. அத்தகைய வலிமையுடன் நாம் செயல்பட வேண்டும். ஆனால் நமது பலவீனங்களுடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கக்கூடாது. இது உலகின் மற்ற நாடுகளுக்கும் பொருந்தும்” எனப் பதிவிட்டுள்ளார்.