“காஷ்மீரின் 3 தொகுதிகளிலும் மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டி!” - மெகபூபா முப்தி அறிவிப்பால் INDIA-கூட்டணியில் சலசலப்பு!
காஷ்மீரின் 3 தொகுதிகளிலும் மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி அறிவித்திருப்பது இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. ஆனால் ஜம்மு-காஷ்மீரில் தொகுதி உடன்பாடு முடிவுக்கு வரவில்லை. முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். அதாவது காஷ்மீரின் 3 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாக கூறினார். ஜம்முவில் உள்ள இரண்டு தொகுதிகளை காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்துள்ளார்.
காஷ்மீரில் உள்ள 3 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவதை பி.டி.பி. தவிர்க்குமாறு தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா கேட்டுக்கொண்ட நிலையில், மெகபூபா முப்தியின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இரண்டு மாநில கட்சிகள் தனித்து களமிறங்கியது இந்தியா கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
பி.டி.பி.-க்கு செல்வாக்கு இல்லை என்றும், கடந்த தேர்தலில் மெகபூபா 4-வது இடத்திற்கு வந்தார் என்றும் உமர் தெரிவித்தார். கடினமான காலங்களில் என்னுடன் பயணித்த தொண்டர்கள் தேர்தல் தோல்விக்கு பிறகு அவமானப்பட்டு மனமுடைந்து போனார்களா?
பி.டி.பி. 28 தொகுதிகளை வென்று, இரண்டு முறை தேசிய மாநாட்டுக் கட்சியை ஆட்சியில் இருந்து விலக்கி வைத்தது. இப்போது அவர்கள் எங்களுக்கு (பி.டி.பி.) செல்வாக்கு இல்லை என்று கூறி வருகின்றனர். இதற்கு உமர் அப்துல்லா பயன்படுத்திய வார்த்தை கடினமாக இருந்தது. எங்கள் தொண்டர்கள் வேதனை அடைந்தனர். எந்த முகத்துடன் நான் எனது தொண்டர்களிடம் சென்று, வேட்பாளர்களை நிறுத்துவதை தவிர்த்து அவர்களை ஆதரிக்க வேண்டும் என்று உமர் சொல்வதாக கூறுவேன்? இது அவ்வளவு சுலபமா என்ன? நாங்கள் வேட்பாளர்களை நிறுத்துவதையும் தேர்தலில் போட்டியிடுவதையும் தவிர வேறு வழியில்லை. எங்களை இந்த நிலைக்கு அவர்கள் கொண்டுவந்துவிட்டனர்.
எங்கள் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சிக்காக அனைத்து இடங்களையும் விட்டுக் கொடுத்திருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்கள் கட்சியிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.