'மக்களுடன் முதல்வர்' திட்டம் | ”காலையில் மனு மாலையில் தீர்வு!” | பொதுமக்களுடன் கலந்துரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக 5 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.
பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் 'மக்களுடன் முதல்வர்' என்ற புதிய திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் கோவையில் தொடங்கி வைத்தார். மக்களுடன் முதல்வர் திட்டத்தில் முதற்கட்டமாக 2,058 முகாம்கள் மூலமாக 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
இந்த நிலையில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாவது கட்ட செயல்பாடுகள் குறித்து 5 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் நாகப்பட்டினம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் கலந்துக்கொண்டனர்.
மேலும், தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடி முகாம் ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜலெட்சுமி என்பவர், மருத்துவ காப்பீட்டு அட்டை கேட்டு இன்று காலை விண்ணப்பித்ததாகவும், உடனே காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டதாகவும் கூறினார்.
அதேபோல், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முனியாண்டி என்பவர், சக்கர நாற்காலி கோரி இன்று விண்ணப்பித்ததாகவும், உடனடியாக தனக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டதாகவும் கூறி அதற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மேலும், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளி ஒருவர், பட்டா பெயர் மாற்றம் கோரி இன்று விண்ணப்பித்ததாகவும், துரிதமாக தனக்கு பட்டா பெயர் மாற்றம் செய்யப்ப்பட்டு அதற்கான ஆணை வழங்கப்பட்டதாகவும், அதற்காக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு முதல் அமைச்சர் உத்தரவிட்டார்.