"ராமர் கோயிலை புறக்கணித்தவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள்" - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
"ராமர் கோயிலை புறக்கணித்தவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள்" என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் வரும் 22ம் தேதி ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பங்கேற்க முன்னாள் அரசியல்வதிகள், அதிகாரிகள், பிரபலங்கள் என 8000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராமர் கோயில் விழாவில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளப் போவதில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் அயோத்தி கோயில் விழாவை அரசியலாக்க முயற்சிக்கின்றனர். அந்த அற்புதமான கோயிலின் விழா பாஜக- ஆர்எஸ்எஸ் நிகழ்வாகியுள்ளது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்களால் அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா, தேர்தல் நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது என்பதால் அவர்களின் அழைப்பை மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் மரியாதையுடன் நிராகரித்துள்ளனர்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Here is the statement of Shri @Jairam_Ramesh, General Secretary (Communications), Indian National Congress. pic.twitter.com/JcKIEk3afy
— Congress (@INCIndia) January 10, 2024
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்ததாவது..
ராமர் கோயில் நிகழ்ச்சி அழைப்பை காங்கிரஸ் நிராகரித்துள்ளது. கடவுள் ராமரை கற்பனை உருவம் என இதே காங்கிரஸ் கட்சிதான் கூறியது. தற்போது ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளது. ராமர் கோயில் நிகழ்ச்சியை புறக்கணித்தவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள்” எனக் குறிப்பிட்டார்.