#Krishnagiri அருகே அடிப்படை வசதிகளின்றி தவித்து வரும் மக்கள்... அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
கிருஷ்ணகிரி அருகே அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வரும் இருளர் குடும்பங்கள், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே பழைய ஊர் என்ற பகுதியில் 30க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்களில் 200க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் எவ்வித அடிப்படை வசதியின்றி தவித்து வருகின்றனர். 2005-ம் ஆண்டிற்கு முன்பாக இந்த மக்கள் ராயக்கோட்டை மலைப்பகுதியில் குகைக்குள் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 2005-ம் ஆண்டு பழைய ஊர் என்ற பகுதியில் தங்குவதற்காக தமிழக அரசு இலவசமாக நிலம் வழங்கி, சிலருக்கு தொகுப்பு வீடுகளும் கட்டிக் கொடுத்தது. ஆனால் அங்கு இன்னும் ஒரு சில குடும்பத்தினர் நிலப்பட்டா மற்றும் வீடுகள் இன்றி தவித்து வருகின்றனர்.
அவர்கள் ஓலை குடிசைகளுக்கு பிளாஸ்டிக் தார்பாய் மூலம் மேற்கூரை அமைத்து, தங்கள் இருப்பிடத்தை அமைத்துள்ளனர். அதிலும் மழைக்காலங்களில் வீட்டிற்குள் தண்ணீர் வந்து விட்டால், அன்று இரவு முழுவதும் தூக்கம் என்பது கேள்விக்குறி. மேலும் சாலை போக்குவரத்து என்பதும் எட்டாக் கனியாக உள்ளது. சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசு பள்ளிக்கு செல்லும் இளம் சிறார்கள், காலணி இல்லாமல் சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் சாலையில் நீர் தேங்கினால் துர்நாற்றத்துடன் வீடு செல்வதற்கு திண்டாட்டம் தான்.
அதுவும் அருகிலேயே அரசு மதுபான கடை செயல்பட்டு வருவதால் மதுவை குடித்து விட்டு, பாட்டில்களை சிலர் போதையில் உடைத்து எரிந்து விட்டு செல்வதால், சிறார்கள் காலில் ரத்தக் காயம் ஏற்பட்டு சிரமப்படுகின்றனர் கிறார்கள் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அந்த பாதையையும் சிலர், சொந்த நிலம் என தெரிவித்து முள்வேலி அமைத்து தடுத்துள்ளனர். குடி தண்ணீர் என்பது, 4 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட ஆழ்துளை கிணறுதான். ஆனால் அதுவும் நிலத்தடி நீர் வற்றியதால், வாட்டர் டேங்க் பழுதடைந்து காணப்படுவதாகவும், ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் மட்டும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குடும்பத்தில் யாராவது உடல் நல பாதிக்கப்பட்டு இறக்க நேரிட்டால், அவர்களை புதைப்பதற்கு கூட அங்கு சுடுகாடு என்பது இல்லை. ஒரு சிலர் ஏரியில் புதைப்பதாக சொல்கிறார்கள். ஆனால், ஏரியில் மழை வந்துவிட்டால் அதற்கும் வழி இல்லை. அன்றாட கூலி வேலை செய்தால் மட்டுமே, குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலையில் உள்ளனர். எனவே தமிழ்நாடு அரசு முன் வந்து இப்பகுதி இருளர் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அங்கு வாழும் மக்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.