தூத்துக்குடி மக்கள் விரைவில் மீண்டு வருவார்கள் - எம்.பி.கனிமொழி நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!
தூத்துக்குடி மாவட்டம் வரலாறு காணாத மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. விரைவாக தூத்துக்குடி மக்கள் விரைவில் மீண்டு விடுவார்கள் என தூத்துக்குடி எம்.பி. கனிமொழி நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன.
இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தலைவன் வடலி, கீரனூர், தண்ணீர் பந்தல், நரசன்விளை, சேர்ந்தபூமகளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளப்பெருக்கால் தனித்தீவுகளாக காட்சியளிக்கிறது. மழை நின்று இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையிலும் கூட தாமிரபரணியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் இந்த கிராமங்கள் தொடர்பின்றி துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தூத்துக்குடி எம்.பி.கனிமொழி, இரண்டு நாட்கள் தொடர்பு கொள்ளமுடியாத பகுதியான ஏரல் பகுதிக்கு சென்று அங்கு சிக்கித்தவிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். அவர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"தூத்துக்குடி மாவட்டம் வரலாறு காணாத மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. முடிந்த அளவிற்கு அனைத்து பகுதிக்கு சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறோம். இரண்டு நாட்கள் தொடர்பு கொள்ளமுடியாத பகுதியான ஏரல் பகுதிக்கு சென்று பார்த்துவிட்டோம். அவர்கள் பத்திரமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் வழங்கிவிட்டோம்.
ஏரல் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு எம்.பியாக நானும், தமிழ்நாடு முதலமைச்சரும் மக்களுடன் இருக்கிறோம். சில இடங்களில் நிவாரணப்பொருட்கள் வழங்க தாமதமாகுவதால் மக்கள் கோபம் அடைக்கின்றனர். அது இயல்பான ஒன்று. அவர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம்.
தூத்துக்குடியில் மக்கள் வசிக்கும் இடங்களில் விரைவாக தண்ணீரை அகற்றுவதற்கான முயற்சி எடுத்து வருகிறோம். விரைவாக தூத்துக்குடி மக்கள் விரைவில் மீண்டு விடுவார்கள்” இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.