“பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்பட வேண்டும்” - பிரேமலதா விஜயகாந்த்!
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10,000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
“விழுப்புரத்திற்கு சென்று மக்களை நேரில் சந்தித்தேன். ஃபெஞ்சல் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து விளைநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தரம்புரி, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன. எதிர்க்கட்சிகள், வயிற்று எரிச்சலில் பேசுவதாகவும், வீண் விளம்பரம் தேடுவதாகவும் முதலமைச்சர் கூறுகிறார். இதில் விளம்பரம் தேடுவதற்கு எதுவும் இல்லை.
அமைச்சர் செல்கிறார். மக்கள் சேற்றை அள்ளி வீசுகின்றனர். திமுக பேனர்கள் கிழிக்கப்படுகின்றன. மக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதைபார்த்துதான் எதிர்க்கட்சிகள் வயித்தெரிச்சல் படவேண்டுமா என முதலமைச்சரிடம் கேட்க விரும்புகிறேன். மக்களுக்கு நடக்கும் அவலங்களை சுட்டிக் காட்டுபவர்கள்தான் எதிர்க்கட்சிகள். அதனை ஏற்று நடந்தால் ஆட்சியையும், முதலமைச்சரையும் வரவேற்கலாம்.
எதிர்க்கட்சிகளை குறைகூறுவதை விட்டு விட்டு, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணங்களை உடனடியாக வழங்க வேண்டும். தேமுதிக சார்பில் எங்களால் முடிந்ததை செய்துள்ளோம். மீண்டும் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட இருக்கிறோம். அனைத்து கட்சிகளையும், தன்னார்வலர்களையும் உதவி செய்ய கேட்டுக்கொள்கிறேன். இயற்கைப் பேரிடரை தடுக்க முடியாது.
உயிரைத்தவிர அனைத்தையும் மக்கள் இழந்து நிற்கின்றனர். இதனால் ரூ.2000 ஒருநாள் கூட அவர்களுக்கு பத்தாது. புதுச்சேரியில் ரூ.5000 வழங்கப்படுகிறது. ஆகையால் அரசு ரூ.10,000 வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு ரூ.50,000, மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்க வேண்டும். சாப்பாடு கொடுப்பது, துணி மணி கொடுப்பதை எதிர்க்கட்சிகள் செய்கிறோம். இதையே ஆளும் கட்சி செய்தால் அது என்ன ஆளும் கட்சி? நான் சொல்லிய விஷயங்களையெலாம் செய்ய வேண்டியதுதான் ஆளும் கட்சியின் வேலை” என தெரிவித்தார்.