‘வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்’ - தமிழ்நாடு அரசு!
வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
வெளிமாநில ஆம்னி பதிவு எண் பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்படுவதால் தமிழ்நாடு அரசுக்கும், போக்குவரத்து துறைக்கும் கிடைக்க வேண்டிய வருமானம் மற்றும் சாலை வரியில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெளிமாநில ஆம்னி பேருந்துகள் இயக்குவதற்கு பல்வேறு விதிகள் விதிக்கப்பட்டிருந்தது.
அவை முழுமையாக பின்பற்றப்படாத சூழ்நிலையில் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயங்கக் கூடாது என கடந்த 12-ம் தேதி போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். பின்னர் ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையாலும், முன்பதிவு செய்திருந்த பயணிகளாலும் இன்று காலைவரை தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகள் இயங்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் காலையுடன் அவகாசம் முடிந்த நிலையில், வெளிமாநில ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் அதனை ரத்துசெய்ய வேண்டும் எனவும், விதிகளை மீறி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் இனி முடக்கப்படும் என்பதால் அவற்றில் பயணிக்க வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
விதிகளை மீறி மக்கள் பயணித்தால் ஏற்படும் சிரமங்களுக்கு அரசு பொறுப்பேற்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.