"மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்" - செல்வப்பெருந்தகை!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களிலும் மழை தீவிரமாக இருக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு கனமழை, வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆற்றங்கரைகள், ஏரிக்கரைகள் மற்றும் தாழ்வான இடங்களில் தங்குவதைத் தவிர்க்கவும். மின்கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள் அருகே செல்ல வேண்டாம். தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் வாகனத்திலோ, நடந்தோ செல்ல வேண்டாம். வீடுகளில் அவசர விளக்குகள், மின் சார்ஜ் சாதனங்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்கவும்.
மேலும், அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றவும். மழை பாதிப்பு ஏற்பட்டால் அருகிலுள்ள நிவாரண முகாம்கள் அல்லது ஆட்சியர் அலுவலகங்களை தொடர்புகொள்ளவும். காங்கிரஸ் பேரியக்கத்தினர் அனைவரும் மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து மழை, வெள்ளம் பாதிப்பு ஏற்படும் இடங்களில் உள்ள மக்களுக்கு உடனடியாக உதவிட வேண்டும் என்றும், மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்து, பாதுகாப்பாக இருக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.