வாக்களிப்பதில் சுணக்கம் காட்டிய மக்கள்? - தமிழ்நாட்டில் சரிந்த வாக்குப்பதிவு சதவிகிதம்!
தமிழ்நாட்டில் கடந்த 2019 மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை விட 3% குறைவாகவே இந்தாண்டு தேர்தலில் வாக்குகள் பதிவாகியுள்ளன.
மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தொடங்கிய நிலையில் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நேற்று(ஏப். 19) வாக்குப்பதிவு நடைபெற்றது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாலை 6 மணியளவில் வரிசையில் நின்றவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. இறுதியாக வாக்கு இயந்திரங்கள் சீலிடப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.நேற்று இரவு 7 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 72.09% வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.48% வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு - தலைமை தேர்தல் ஆணையம் தகவல்!
கடந்த முறை நடைபெற்ற தேர்தல்களோடு ஒப்பிடுகையில் இந்த முறை நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 72.44% வாக்குகள் பதிவானது. அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 82.41% வாக்குகளும், குறைந்தபட்சமாக தென் சென்னை தொகுதியில் 57.07% வாக்குகளும் பதிவாகின. 2019 தேர்தலை விட சுமார் 3% வாக்குகள் குறைவாகவே 2024 தேர்தலில் பதிவாகியுள்ளன.2014 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 73.70% வாக்குகள் பதிவானது. 2014ம் ஆண்டு தேர்தலோடு ஒப்பிடுகையில் இந்தாண்டு தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள் 4.24% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு தேர்தலின் போதும், 100 சதவிகித வாக்குப்பதிவு வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளும் முன்னெடுப்புகளும் எடுக்கப்பட்டு வந்தாலும், அடுத்தடுத்த தேர்தல்களில் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்து கொண்டே வருகிறது.