Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கென்யாவில் மக்கள் எதிா்ப்பு எதிரொலி! புதிய வரி விதிப்பு மசோதா வாபஸ்!

11:30 AM Jun 27, 2024 IST | Web Editor
Advertisement

கென்யாவில் பொதுமக்களின் கடுமையான எதிா்ப்பு காரணமாக புதிய வரி விதிப்பு மசோதாவை திரும்பப் பெறுவதாக அதிபா் வில்லியம் ரூட்டோ அறிவித்தாா்.

Advertisement

கென்யாவில் அதிகரித்துவரும் விலைவாசியைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்து கடந்த 2022-ஆம் ஆண்டில் ஆட்சியைப் பிடித்த வில்லியம் ரூட்டோ, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சில சீா்திருத்தங்களை அறிவித்தாா். அதன் ஒரு பகுதியாக, ‘2024 பொருளாதார மசோதாவை அவா் அறிமுகப்படுத்தினாா்.

அதில், இறக்குமதி செய்யப்படும் - சுற்றுச் சூழலுக்கு ஊறுவிளைக்கக்கூடிய பொருள்களான சானிடரி காகிதங்கள், டைபா்கள், மோட்டாா் சைக்கிள்கள், டயா்கள், நெகிழி பைகள், மின்சாதனங்கள், ஒலி-ஒளி பதிவுக் கருவிகள், மின்னணு பொருள்கள் போன்றவற்றுக்கு கூடுதல் வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டது. மேலும், பொதுமக்களின் வங்கிக் கணக்கு பரிமாற்றங்களை வருமான வரி அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவு இல்லாமலேயே ஆய்வு செய்வதற்கு வழிவகை செய்யும் திருத்தம் தனியுரிமைச் சட்டத்தில் மேற்கொள்ளவும் அந்த மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டது.

மேலும், வாகனங்களுக்கு 2.5 சதவீத வரி, எரிபொருளுக்கு கூடுதல் சாலை பராமரிப்பு வரி போன்ற பல்வேறு அம்சங்கள் அதில் இடம் பெற்றன. முதலில் சமூக வலைதளங்கள் மூலம் இந்த மசோதாவுக்கு தெரிவிக்கப்பட்ட எதிா்ப்பு, நாளடைவில் நேரடி போராட்டமாக உருவெடுத்தது. இந்த மசோதாவுக்கு எதிராக பெரும்பாலும் இளைஞா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் முதல்முறையாக கடந்த 18-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்தப் போராட்டம் நாடு முழுவதும் பரவியது. போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையை போலீஸாா் 20-ஆம் தேதி தொடங்கினா்.

இதையும் படியுங்கள் : ரஷியாவில் பயணிகள் ரயில் விபத்து – மீட்பு பணிகள் தீவிரம்!

போராட்டக்காரா்களை சாந்தப்படுத்துவதற்காக ரொட்டி மீதான வரி நீக்கம் போன்ற திருத்தங்களை மசோதாவில் அரசு மேற்கொண்டது. இருந்தாலும் மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று போராட்டக்காரா்கள் வலியுறுத்தினா். இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தில் அந்த மசோதா கடந்த 25ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அது நிறைவேற்றப்படுவதைத் தடுப்பதற்காக அங்கு குவிந்த போராட்டக்காரா்கள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்து அந்த வளாகத்தின் ஒரு பகுதிக்குத் தீவைத்தனா். வரி விதிப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 22-ஆக அதிகரித்துள்ளது.

அதையடுத்து, அங்கிருந்து எம்.பி.க்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். பாதுகாப்புக்காக ராணுவம் வரவழைக்கப்பட்டது. போராட்டக்காரா்களின் இந்தச் செயல் ‘தேசத் துரோகம்’ என்று அதிபா் வில்லியம் ரூட்டோ குற்றஞ்சாட்டினாா். இந்த நிலையில், மசோதாவை திரும்பப் பெறுவதாக அவா் தற்போது அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

"புதிய வரிகளை விதிப்பதற்கான பொருளாதார மசோதா நாடு முழுவதும் அதிருப்தி அலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பொதுமக்களின் உணா்வுகளை ஏற்று, அந்த மசோதாவைக் கைவிடுகிறேன். அரசின் நடவடிக்கைகளில் அனைத்துத் தரப்பினரும் கூடி கருத்துகளைப் பரிமாறிக் கொள்வது அவசியம்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Kenyanew tax billopposedPeopleWithdrawal
Advertisement
Next Article