திமுக அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர் - தவெக தலைவர் விஜய் விமர்சனம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"பொய்யான வாக்குறுதிகளைத் தந்து மக்களை ஏமாற்றி வரும் தி.மு.க. அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் முற்றிலும் இழந்து விட்டனர். தங்களுக்கென்றே உண்மையான தோழமை மற்றும் பாரபட்சமற்றத் தன்மையுடன் கூடிய ஓர் அரசு அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். மக்களின் மனமறிந்து அரசியல் களம் காணும் தமிழக வெற்றிக் கழகம், மக்களுக்காக 'மனசாட்சி உள்ள மக்களாட்சி'யை அமைக்கும் உன்னத லட்சிய நோக்குடன் களமாடி வருகிறது.மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் "வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நா வரேன்" என்கிற நமது பயணம்தான் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம்.
நாளை (13.09.2025) காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே தொடங்கி அடுத்தடுத்து, நமது மதுரை மாநாட்டில் சொன்னதுபோலவே, என் குடும்ப உறவுகளாகிய உங்களைச் சந்திக்க, உங்களுக்காகவே குரல் கொடுக்க உங்கள் விஜய், நம் கொள்கைத் தலைவர்கள் தந்தை பெரியார். பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில், "மக்களிடம் செல்" என்ற பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் ஆணையை மானசீகமாக ஏற்று. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வருகிறேன்.
ஓர் அரசியல் கட்சியின் தலைவராக, நாம் ஜனநாயக முறையில் மக்களைச் சந்திக்க விழைகிறோம். இந்நிலையில், தமிழ்நாட்டு அரசியலிலேயே இதுவரை இல்லாத வகையில், எந்த அரசியல் தலைவருக்கும் செய்யாத வகையில், மக்கள் சந்திப்பு சார்ந்த பாதுகாப்பு நிபந்தனைகளை நம் கழகத்தின் மீது மட்டும் காவல்துறை விதித்துள்ளது. இப்படி பாதுகாப்பு சார்ந்த தமது பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல், அரசியல் நிலைப்பாடுகளைக் கடந்து தார்மீகக் கடமையோடு நமது கழகத் தோழர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதை இந்த அரசும் காவல்துறையை வழிநடத்தும் தமிழ்நாட்டு முதலமைச்சரும் உறுதி செய்ய வேண்டும்”
என்று தெரிவித்துள்ளார்.