திருச்செந்தூரில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த வெள்ள நீர் - உடைமைகளுடன் மக்கள் வெளியேற்றம்!
திருச்செந்தூர், புன்னைகாயல் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் உடைமைகளுடன் வெளியேறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உட்பட தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகத் தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலிருந்தும் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் மழை நீரின் அளவும் அதிக அளவு தாமிரபரணி ஆற்றில் கலந்து வருகிறது.
இதனால் தாமிரபரணி ஆற்றில் சுமார் 70 ஆயிரம் கன அடி நீர் வரை வெளியேற்றப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் தடுப்பணையாக விளங்கும் மருதூர் அணைக்கட்டிலிருந்து மட்டும் சுமார் 74 ஆயிரம் கன அடி நீர் தற்போது வரை வந்து கொண்டிருக்கிறது. இந்த தாமிரபரணி ஆற்றில் வரும் தண்ணீர் அனைத்தும் வங்கக்கடலில் கடைசியாகக் கலக்கும் இடம்தான் திருச்செந்தூர் அருகில் உள்ள புன்னக்காயல் பகுதியாகும்.
இந்த புன்னக்காயல் பகுதியில் சுமார் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. தாமிரபரணி ஆற்றில் வரும் தண்ணீர் முழுவதும் புன்னக்காயல் வழியாகக் கடலில் கலந்து வருகிறது. தாமிரபரணி தண்ணீர் அதிகமாக வருவதால் புன்னக்காயல் ஊருக்குள் இந்த மழை வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மறக்குடி தெரு, நூறு வீடு தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் ஆனது சூழ்ந்துள்ளது.
பொதுமக்கள் தங்களது உடைமைகளையும், பாத்திரங்களையும் எடுத்துக் கொண்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி முகாம்களுக்குள் குடியேறி வருகின்றனர். வெள்ளம் அதிக அளவு வந்து கொண்டிருப்பதால் புன்னக்காயல் பகுதி தனித்தீவு போல் காட்சியளிக்கிறது.