அயோத்தியில் முதல் நாள் தரிசனத்திற்கு வரும் மக்கள் கூட்டம் - தற்காலிக கூடாரங்கள் அமைத்து உபி அரசு சிறப்பு ஏற்பாடு!
அயோத்தியில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தங்குவதற்கு தற்காலிக கூடாரங்கள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் குடமுழுக்கு, குழந்தை ராமர் பிரதிஷ்டை நிகழ்வும் விமரிசையாக நடைபெற்றது. கோயில் திறப்பு விழாவிற்கு இந்தியா மட்டுமில்லமால் உலகம் முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் பொது மக்களுக்கு திறப்பு விழா அன்று அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலால், அயோத்தி உலகளவில் பேசப்படும் நகரங்களில் ஒன்றாக மாறியுள்ளது. அதன் காரணமாக மத்திய அரசும், மாநில அரசும் அயோத்தி நகரின் வளர்ச்சிக்காகவும், சுற்றுலா மேம்பாட்டிற்காகவும் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றது.
ராமர் கோயில் திறப்பு விழாவை தொடர்ந்து அடுத்தகட்டமாக பொதுமக்கள் தரிசனம் மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 7 மணி வரையிலும் தரிசனம் செய்யலாம் என்ற தகவலும் கோயில் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 6.30 மணிக்கும் இரவு 7.30 மணிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் எனவும், அந்த சமயங்களில் ராமரை தரிசிக்க இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆன்மீகம் சார்ந்த ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட கூடாரத்தில் கடும் குளிரை தாங்கும் வசதியும், கூடாரங்களின் முகப்பில் குளிரை சமாளிக்க உதவியாக தீமூட்டும் இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தற்காலிக கூடார நகரங்களில் ராமாயண கதைகளும், கலாசார நடன மற்றும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும் எனவும், தற்காலிக கூடார நகரங்களின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் எனவும் அறக்கட்டளை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.