“மக்களே உஷார்... ஆப்பிளை சுரண்ட சுரண்ட வரும் மெழுகு”... ஒசூரில் உணவு பாதுகாப்புத் துறை அதிரடி ஆய்வு!
ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை பகுதியில், உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய சோதனையில் தர்பூசணி பழங்கள் சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பதற்காக பழங்களில் ரசாயனங்களை ஊசி மூலம் செலுத்தி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இந்த செய்தி அடங்குவதற்குள்ளாக ஒசூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழக்கடைகளில், ஒசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தியதில், பெரும்பாலான பழக்கடைகளில் மெழுகு பூசப்பட்ட ஆப்பிள்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் சம்பவம் தெரிய வந்துள்ளது.
ஆப்பிள் பழங்கள் விரைவில் கெடாமல் அழகாக காட்சியளிப்பதற்கு மட்டுமல்லாமல், உள்ளே கெட்டு போனதை மறைக்கும் வகையில் மெழுகு பூசப்படுகிறது. இப்படி மெழுகு பூசிய ஆப்பிள் 6 மாதங்கள் வரை அப்படியே வைத்திருந்து விற்க முடியுமாம்.
இந்த மெழுகு நமது உணவுக் குழாயில் செரிமானம் ஆகாமல் அப்படியே படிந்து
நின்றுவிடும். இந்தப் படிமம் கேன்சரை உருவாக்கிவிடும் என்கிறது மருத்துவம்.
தோலை நீக்கி விட்டு சாப்பிடுவது, இல்லையென்றால் கொதிக்கும் நீரில் போட்டுக்
கழுவி மெழுகை வெளியேற்றிவிட்டு சாப்பிடுவதுதான் நமக்கு நல்லது என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.
ஒசூர் பகுதியில் மெழுகு பூசிய ஆப்பிள்களை ஆய்வு செய்த அதிகாரிகள், வியாபாரிகளை கண்டித்தனர். இதுபோன்ற ஆப்பிள்களை மொத்தமாக விற்கும் சன் ஈஸ்ட் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்படும். தொடர்ந்து இதுப்போன்ற ஆப்பிள்களை விற்போர் மீது நடவடிக்கை எடுத்து கடைகள் சீல் வைக்கப்படும் என உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்தனர்.