மக்களே உஷார்... ஸ்கிரீன்ஸாட் அனுப்பி பணம் கேட்டால் திருப்பி அனுப்பாதீங்க!
பெங்களூருவில் OLX-ல் தனது ஐபேடை விற்க முயன்ற நபர், அவர் எவ்வாறு ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மோசடியில் இருந்து தப்பினார் என்பதை பகிர்ந்துள்ளார்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக இன்று வங்கி சேவைகள் உள்ளங்கையில் வந்து விட்டது. அதேசமயம், மோசடி நபர்களும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல புதுமையான வழிகளில் பண மோசடிகளில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பாக வங்கிகளும் அரசும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. ஆனாலும் இந்த மோசடியும் தொடர்கிறது. ஏமாறுபவர்களும் ஏமாந்து கொண்டுதான் உள்ளனர்.
சமீப காலமாக உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியது போன்ற ஸ்கிரீன்ஸாட் ஒன்றை அனுப்புகின்றனர். பின் அதிகமாக அனுப்பிவிட்டேன் திருப்பி அனுப்புங்கள் என கூறுகின்றனர். அதனை நம்பி இவர்களும் பணத்தை அனுப்பி விடுகின்றனர். இவ்வாறே இந்த மோசடி நிகழ்கிறது. இந்நிலையில் இதேபோன்ற சம்பவம் ஒன்று பெங்களூரில் நடந்துள்ளது. இதனை அவர் தனது எக்ஸ் தளத்திலும் பகிர்ந்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள அனாகாடமியில் மூத்த துணைத் தலைவர் ஹார்டிக் பாண்டியா OLXல் தனது ஐபேடை விற்க விளம்பரம் செய்துள்ளார். மொபைலின் விலை 16,000 எனவும் குறிப்பிட்டுள்ளார். அந்த போனை வாங்க அவர் ஆர்வம் காட்டியுள்ளார். பின்னர் இருவரும் வாட்ஸ் அப்பில் பேசத் தொடங்கியுள்ளனர். இதனையடுத்து திலீப் விகாஸ் பாண்டியாவுக்கு பணம் அனுப்பியதாக தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான ஸ்கிரீன்ஸாட்டும் அனுப்பியுள்ளார்.
🚨 UPI scam from this morning 🚨
Posted an ad for an iPad on OLX.
Scammer gets in touch, takes it to WhatsApp and offers to transfer money instantly.
Then does this — pic.twitter.com/xWeeYyCrHA
— Hardik Pandya (@hvpandya) March 20, 2024
இதனையடுத்து ரூ. 10,000 கூடுதலாக அனுப்பிவிட்டதாக கூறி, அதனை திருப்பி அனுப்புமாறு பாண்டியாவிடம் கூறியுள்ளார். உடனே பாண்டியா தனக்கு வங்கி கணக்கினை சரிபார்த்துள்ளார். அதில் சரிபார்க்க பயன்படுத்தப்படும் 1 ரூபாய் பரிவர்த்தனை மட்டுமே வந்துள்ளது. இதனைப்பார்த்த பாண்டியா தனக்கு பணம் அனுப்பப்படாமல், அனுப்பியதாக கூறி மோசடியில் ஈடுபட்டதை உணர்ந்துள்ளார். இந்த சம்பவம் மற்றும் ஸ்கிரீன்ஸாட்டை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நேற்று பதிவிடப்பட்ட இந்த பதிவு 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது. இதற்கு பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் சில கருத்துகளை இங்கு காண்போம்.
- OLX இப்போது இத்தகைய மோசடிகளால் நிறைந்துள்ளது. ராணுவ அதிகாரிகளைப் போல் வேஷம் போடுபவர்களும் நிறைய பேர் உள்ளனர்.
- Olx மற்றும் quikr ஆகியவைகளில் தற்போது இந்த மோசடி செய்பவர்கள் அதிகமாகி உள்ளனர்.
- நண்பா எனக்கும் இதே போல பல வருடங்களுக்கு முன்பு நடந்தது. நான் 30 ஆயிரம் இழந்தேன். அதைப் பற்றி புகார் செய்தேன், ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.
- இதுலேருந்து நான் ஒன்னு கத்துக்கிட்டேன். எந்த ஒரு தொகையையும் அவர்கள் கேட்ட உடனே திருப்பி அனுப்பக்கூடாது.