இஸ்ரேல் பிரதமர் #Nethanyahu அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் - பதவி விலகக் கோரி முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு!
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் உள்ள பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய ஒருவருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் காசா பகுதியிலிருந்து இடம் பெயர்ந்தனர். இப்போரில் இதுவரை 43, 800 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகாமானோ காயமடைந்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் என்பது அதிகமாக உள்ளதாக சர்வதேச சேவை அமைப்புகள் அறிவித்துள்ளன.
ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக் கட்டப் போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை ஈரானில் வைத்து இஸ்ரேல் கொலை செய்தது. இதனைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹஸன் நஸ்ரல்லாஹ் வீட்டின் மீது ஏவுகணை தாக்குதலை நடத்திய இஸ்ரேல் அவரையும் கொலை செய்தது. மேலும் சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் அடுத்த தலைவரான யஹ்யா சின்வாரும் கொல்லப்பட்டார்.
போர் நீடித்து வரும் நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பல நாடுகள் அழைப்பு விடுத்த போதிலும் ஹமாஸை அழிக்கும் வரை போரை நிறுத்தப் போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்த நிலையில் தினந்தோறும் பாலஸ்தீனம் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. மற்றொருபுறம் தங்களது நாட்டைச் சார்ந்த ராணுவ அதிகாரி. ஹிஸ்புல்லா தலைவர் மற்றும் லெபனான் மீதான தாக்குதலுக்கு பழி வாங்கும் விதமாகவும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியது.
இஸ்ரேலின் தாக்குதல் தொடர்வதால் தங்களிடம் இருக்கும் பணயக் கைதிகளை விடுவிக்கப்போவதில்லை என ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஹமாஸிடம் இருக்கும் பணயக் கைதிகளை விடுவித்து போரை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை இஸ்ரேல் மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் உள்ள பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தி வருகின்றனர். மேலும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பதவி விலக வலியுறுத்தியும் மறு தேர்தலை நடத்தக் கோரியும் பொதுமக்கள் முழக்கம் எழுப்பினர்.