மக்களே உஷார்... நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு - மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (மே 3) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : தங்கம் வாங்க இன்று சரியான நேரமா? விலை நிலவரம் இதோ!
மே 8ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை 84 டிகிரி முதல் 100 டிகிரி, ஃபாரன்ஹீட் வரை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது. இது மே 28-ம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.