மழையால் மக்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை - அமைச்சர் முத்துசாமி பேட்டி!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் முத்துசாமி மேட்டுப்பாளையம் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மழை பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் காணொளி காட்சி மூலம் கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கோவையில் மாவட்ட அளவிலும் மாநகராட்சி அலுவலர்களும் மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்து வைத்திருக்கிறார்கள் என்றார். கடுமையான மழை இல்லை என்றாலும் சில இடங்களில் கூடுதலான மழை இருக்கிறது. ஐந்து இடத்தில் சிறு சிறு வீடுகள் பாதிப்படைந்துள்ளது. ஆனால் மக்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளார்கள். மேலும் அந்த சம்பவத்தில் இரண்டு பேர் மட்டும் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
16 ஜேசிபி இயந்திரம் உட்பட அவசர காலத்திற்கு தேவைப்படும் அனைத்து உபகரணங்களும் உள்ளது என்றும் மேட்டுப்பாளையம் வால்பாறை போன்ற மூன்று தேவையான இடத்தில் பேரிடர் மீட்பு குழுவினர் தாயார் நிலையில் உள்ளார்கள். மேலும் தற்பொழுது கூட சில இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது, உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.
கடந்த முறை மழை பெய்யும் பொழுது ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கெடுத்து அது சரி செய்யப்பட்டு உள்ளது, இந்த ஏற்பாடுகள் பற்றி முதலமைச்சர் காலையில் கேட்டறிந்தார். வால்பாறையில் உள்ள குழுவினரே தற்போதைக்கு போதுமானவர்கள் என்றும் தேவைப்பட்டால் கூடுதல் பேரிடர் மீட்பு குழுவினரை அங்கு நகர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சுற்றுலா பயணிகள் எங்கு செல்ல கூடாதோ அங்கெல்லாம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் சுற்றுலாப் பயணிகள் மாற்று பாதையில் செல்வதற்கும் வழிவகை உள்ளதா என்று ஆராய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். ஒரு சில இடங்களில் பாதிப்புகள் ஏற்படுவது போன்று இருக்கின்ற பாறைகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பாக அகற்றிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். வீடுகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தாசில்தார்கள் சென்று உள்ளார்கள் நிவாரணம் குறித்து ஏற்பாடுகளை செய்வார்கள்.
ஒரே நேரத்தில் அதிகப்படியான மழை வரும் பொழுது பிரச்சனைகள் ஏற்படும், மழை நீர் வடிந்து செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மோசமான நிலையில் உள்ள வீடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.