"முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதியம் உயர்வு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆதி திராவிடர் மற்றும் சுற்றுச்சூழல்துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.35 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.17,500 ஆகவும் மற்றும் மருத்துவப் படி ரூ.1 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதுகுறித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
"துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தைப் பற்றி இங்கே குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். அதேபோன்று, உறுப்பினர் ஜெகன்மூர்த்தி பேசுகிறபோது அதைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். ஆகவே, ஒட்டுமொத்தமாக பல சட்டமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து என்னிடத்திலே கோரிக்கையும் வைத்திருக்கிறார்கள். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய அமைப்பைச் சார்ந்தவர்களும் என்னை வந்து நேரடியாகச் சந்தித்து இதுகுறித்து மனுவைத் தந்திருக்கிறார்கள்.
எனவே, அதையெல்லாம் பரிசீலித்துப் பார்த்து, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் மேலவை உறுப்பினர்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. 1-4-2025 முதல் இது அமலுக்கு வருகிறது. இதேபோல், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மேலவை உறுப்பினர்களின் குடும்ப ஓய்வூதியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.17,500 ஆகவும், அவர்களுக்கான மருத்துவப்படி ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாகவும் உயர்த்தப்படுகிறது"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.