வங்கக்கடற்கரையில் ஆகஸ்ட் 7ம் தேதி அமைதிப் பேரணி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "நெடுநாள் கழித்து, உங்களுடன் இந்த மடல் வாயிலாக உரையாடுகிறேன். காரணம், சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் – வீட்டில் ஓய்வெடுத்தும் வந்தேன். சிகிச்சை – ஓய்வு என்று சொன்னாலும், மருத்துவமனையில் இருந்தபடியே அரசு அலுவல்களையும் கழகப் பணிகளையும் செய்துகொண்டுதான் இருந்தேன்.
ஓய்வுக்குப் பிறகு, தலைமைச் செயலகத்தில் என்னுடைய வழக்கமான பணிகளைத் தொடங்கியும், நேற்று கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில், ‘உடன்பிறப்பே வா’ என உத்திரமேரூர் தொகுதி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தேன். அரசுப் பணிகளுக்கிடையில், நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதுவரையில் 39 தொகுதிகளின் கழக நிர்வாகிகளைச் சந்தித்திருக்கிறேன். இந்தச் சந்திப்பு அடுத்தடுத்து தொடர உள்ளது.
தமிழே உயிராக - தமிழர் வாழ்வே மூச்சாக - தமிழ்நாட்டின் உயர்வே வாழ்வாகக் கொண்டு தமிழினத் தலைவராக மக்கள் மனங்களில் நிறைந்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதி. இயற்கை அவரை நம்மிடமிருந்து பிரித்து 7 ஆண்டுகளானாலும் அவர்தான் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிறார். வாரத்தின் 7 நாட்களும் கருணாநிதியின் நினைவுகளுடன்தான் கழக உடன்பிறப்புகளின் பொழுது விடிகிறது. எந்நாளும் நம்மை இயக்கும் ஆற்றலாகத் திகழ்பவரும் முத்தமிழறிஞர் கலைஞர்தான்.
பேரறிஞர் பெருந்தகை அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அவர் கட்டமைத்த ஆட்சியையும் கட்டிக்காத்து, அரை நூற்றாண்டு காலம் இந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கி, 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, 19 ஆண்டுகாலம் சிறப்பான நிர்வாகத்தை அளித்து, நவீனத் தமிழ்நாட்டைக் கட்டி எழுப்பிய சிற்பியான நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் வழியில்தான், உங்களில் ஒருவனான என் தலைமையில் 6-ஆவது முறையாகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியமைத்து, மக்கள் நலன் காக்கும் நல்லரசாகச் செயலாற்றி வருகிறது.
முத்தமிழறிஞர் ஆட்சியில் இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்ந்த குடிசை மாற்று வாரியம், கை ரிக்சா ஒழிப்பு, பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் சம உரிமை, முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்குக் கட்டணமில்லா உயர்கல்வி, உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம், சமத்துவபுரங்கள், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போன்ற எண்ணற்ற திட்டங்களின் வழியில், நமது திராவிட மாடல் அரசு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், விடியல் பயணம், நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை வழங்கி, இந்தியாவின் பிற மாநிலங்கள் வியந்து நோக்கிப் பின்பற்றக்கூடிய வகையில் செயல்படுத்தி வருகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனுநீதி நாளை அறிமுகப்படுத்தியவர் தலைவர் கலைஞர். அவர் வழியில், திராவிட மாடல் அரசின் திட்டங்களில் பயன்பெறும் வகையில் மக்களைத் தேடிச் சென்று மனுக்களைப் பெறும் முகாம்களை நடத்தி, உரிய தீர்வுகளை மேற்கொண்டு வருகிறோம். எளிய மக்களுக்கும் கண்ணொளித் திட்டம் மூலம் கண்புரை அறுவை சிகிச்சை, பெரியம்மை தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து எனப் பல மருத்துவ முகாம்கள் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்டது போல, நமது திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களின் உடல்நலன் காத்திட வட்டாரங்கள்தோறும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உரிய சிகிச்சைக்கு வழியமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சியின் சமூகநீதிக் கொள்கைகளால், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளால், பொருளாதாரம் சார்ந்த திட்டங்களால் ஏதேனும் ஒரு வகையில் பயன்பெற்று உயர்ந்தது போலவே, நமது திராவிட மாடல் அரசின் திட்டங்களால், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒரு பயனையாவது பெற்று முன்னேற்றம் கண்டு வருவதை நாடறியும். கல்வியிலும் சமுதாய முன்னேற்றத்திலும் தனிநபர் வருமானத்திலும் பொருளாதார வளர்ச்சியிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகக் திகழ்வதை நாம் மட்டும் சொல்லவில்லை, மத்திய பாஜக அரசின் பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் பல்வேறு துறைகளின் அறிக்கைகளே உறுதி செய்கின்றன. இவையனைத்தும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் கட்டமைத்த வழித்தடத்தில் தொடரும் நம்முடைய பயணத்தின் வெற்றிகள்.
தமிழ்நாட்டின் நலன் காக்கும் திட்டங்களை நம் உயிர்நிகர் கருணாநிதி வழியிலான திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வரும் நிலையில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதிலும் தலைவர் கலைஞர் முன்னெடுத்த மாநில சுயாட்சி முழக்கத்தின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் நலன்களையும் காக்கின்ற வகையில் சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது நமது திராவிட மாடல் அரசு. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆகஸ்ட் 15 விடுதலை நாளில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் மாநிலத் தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியை ஏற்றுகின்ற உரிமையைப் பெற்றுத் தந்தார். மாநிலத் திட்டக்குழுவை அமைத்தார். திமுகவின் ஆதரவுடன் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமரானபோது மத்திய - மாநில உறவுகளை மேம்படுத்தும் 'இன்டர் ஸ்டேட் கவுன்சில்' அமைத்திட வழி செய்தார்.
நான்காண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நாள்தோறும் மாநில உரிமைகளுக்கான போராட்டம்தான். முந்தைய அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு, உதய் மின்திட்டம் , சொத்து வரி உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் வஞ்சகத் திட்டங்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததால், தமிழ்நாடு அதன் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடுவதற்காக நாடாளுமன்றத்தில் போர்க்குரல் எழுப்புவதோடு, உச்சநீதிமன்றத்திலும் சட்டப்போராட்டத்தை நடத்துகிறது கழக அரசு. அதற்கான நெஞ்சுரத்தை நமக்குத் தந்திருப்பவர் ‘மானமிகு சுயமரியாதைக்காரர்‘ எனத் தன்னை அடையாளப்படுத்திய நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.
பாஜக ஆட்சி செய்யாத - ஆட்சிக்கே வர முடியாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அதிகாரப் பறிப்பு செய்யும் ஜனநாயகப் படுகொலை தொடர்ந்து வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு முன்னெடுத்த சட்டப்போராட்டத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசே அதிகாரம் படைத்தது என்பது நிலைநாட்டப்பட்டு, தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்குமான ஜனநாயக நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது. இந்தப் போராட்டங்களை இன்னும் வலிமையாகத் தொடர வேண்டியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் நலன் மீது கொஞ்சமும் அக்கறையில்லாத அதிமுக, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தமிழர்களுக்கு மிகப் பெரும் துரோகத்தை இழைத்து வருகிறது.
உண்மையான அதிமுக தொண்டர்களே மனம் புழுங்குகிற வகையில், அடிப்படைக் கொள்கைகள் ஏதுமற்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி டெல்லி வரை சென்று மண்டியிட்டு பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார். சேராத இடந்தன்னில் சேர்ந்து தீராத பழி சுமந்தபடி ஊர் ஊராகப் பயணித்து, பொய்களைப் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்.
நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதி 14 வயதில் பள்ளி மாணவனாகத் திருவாரூர் வீதிகளில் தமிழ்க்கொடி ஏந்தி, இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பியவர். கல்லக்குடி போராட்டத்தில் வடமொழி ஆதிக்கத்தை எதிர்த்து, தமிழ் காத்திடத் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தவர். 1965 மொழிப்போர்க்களத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்து பாளையங்கோட்டையில் தனிமைச் சிறை கண்டவர். தனது 95 ஆண்டு வாழ்வில் 81 ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான முத்தமிழறிஞர் கலைஞரின் இனம் - மொழி காக்கும் போராட்டங்கள் ஓய்வின்றித் தொடர்ந்தன. தமிழுக்குச் செம்மொழித் தகுதி தரப்படவேண்டும் என்கிற தமிழறிஞர்களின் நூற்றாண்டுக் கனவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிறைவேறிடச் செய்தவர் நம் உயிர்நிகர் கருணாநிதி.
இந்தியாவின் முதல் செம்மொழி என்ற தகுதிபெற்ற தமிழுக்கு மிகக் குறைந்த நிதியை ஒதுக்குகிற தமிழர் விரோத மத்திய பாஜக அரசு, சமஸ்கிருத மொழிக்குப் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொட்டிக் கொடுக்கிறது. இந்தி அல்லாத மொழிகளைச் சிதைக்கின்ற வகையில் ‘தேசியக் கல்விக் கொள்கை 2020‘ மூலம் இந்தி மொழியைத் திணிக்க முயற்சிக்கிறது. ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைக்கின்ற கல்வியைப் பறிக்கின்ற வகையில் குலக்கல்வி முறையைக் கொண்டு வரத் துடிக்கிறது. அறிவியல்பூர்வமாக நிறுவப்பட்ட தமிழர் பண்பாட்டு அடையாளமான கீழடி அகழாய்வு முடிவுகளை மத்திய பாஜக அரசு வெளியிட மறுக்கிறது. ஆரியப் பண்பாட்டை நம் மீது திணிக்கப் பார்க்கிறது.
முத்தமிழறிஞர் கலைஞர் இன்று நம்முடன் இருந்திருந்தால் எத்தகைய உணர்வெழுச்சியுடன் ஒன்றிய அரசை எதிர்த்து நிற்பாரோ, அவரிடம் அரசியல் பாடம் கற்ற கழத்தினரான நாமும் அதே உணர்வுடன் மத்திய பாஜக அரசின் தமிழர் விரோத - மனிதகுல விரோத சூழ்ச்சிகளை எதிர்த்து நிற்கிறோம். எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவோ அடங்கி ஒடுங்கி பாஜகவுக்கு அடிமைச் சேவகம் செய்து கொண்டிருக்கிறது.
“வீரன் சாவதே இல்லை, கோழை வாழ்வதே இல்லை“ என்றார் தலைவர் கலைஞர். கழகத்தினர் களத்தில் வீரர்களாக நிற்கிறார்கள். தமிழைக் காக்கவும் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்கவும் திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் உறுதியுடனும் தெளிவுடனும் தன் போராட்டத்தை முன்னெடுக்கும். தமிழ் மக்களின் வளமான வாழ்வுக்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தும்.
எப்போதும் மக்களுடன் நிற்கின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் தலைவர் கலைஞர் கட்டிக் காத்த இயக்கம். அவர் இல்லை என்று எண்ணாமல், என்றென்றும் அவர் நினைவுகளில் வாழ்கின்ற கோடிக்கணக்கான உடன்பிறப்புகளில் உங்களில் ஒருவனான நானும் இருக்கிறேன். ஆகஸ்ட் 7 அன்று நம் உயிர்நிகர் தலைவரின் நினைவு நாளில் தமிழர் வாழும் நிலமெங்கும் அவர் நினைவைப் போற்றுவோம்.
வங்கக் கடற்கரையில் தன் அண்ணனுடன் நிரந்தர ஓய்வு கொண்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7 அன்று நடைபெறும் அமைதிப் பேரணியில் உடன்பிறப்புகள் கடலெனத் திரண்டு வணக்கத்தைச் செலுத்துவோம். மாவட்டங்கள்தோறும் அமைக்கப்பட்டுள்ள தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலைகளுக்கு அந்தந்த மாவட்டக் கழக நிர்வாகிகள் - உடன்பிறப்புகள் மாலையிட்டு மரியாதை செலுத்திட வேண்டும். கிளைகள்தோறும் தலைவர் கலைஞரின் நினைவு போற்றப்பட வேண்டும். இந்நிகழ்வுகளில் கழக நிர்வாகிகள் காலை 7 மணியளவில் பங்கேற்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
வீடுகளிலும் வீதிகளிலும் தமிழ்காத்த போராளியாம் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படங்களுக்கு, மலர்தூவி வணக்கம் செலுத்துங்கள். தலைவர் கலைஞரின் நினைவுகளை நெஞ்சிலேந்தி, கொள்கைவழிப் பயணத்தைத் தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் 7-ஆவது முறையாகக் கழக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம். ஓரணியில் தமிழ்நாடு எனும் மகத்தான முன்னெடுப்பில் மக்களை ஒருங்கிணைத்துக் களத்தில் வெல்வோம்! தலைவர் கலைஞர் புகழ் ஓங்குக! திராவிட முன்னேற்றக் கழகம் வெல்க"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.