"மணிப்பூரில் 6 மாதங்களில் அமைதி திரும்பும்" - முதலமைச்சர் பைரன் சிங்!
மணிப்பூரில் கடந்த ஆண்டு குக்கி, மெய்தி இன மக்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இன்னும் 6 மாதங்களில் அமைதி திரும்பும் என முதலமைச்சர் பைரன் சிங் தெரிவித்தார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பைரன் சிங் உள்ளார். கடந்த ஆண்டு மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த பிரச்னை தற்போது தணிந்திருந்தாலும், அவ்வப்போது சிறு கலவரங்கள் வெடிக்கின்றன. இதனால் மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது. இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்பும் என்று பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
"குக்கி மற்றும் மெய்தி சமூகத்தினர் இடையே ஏற்பட்ட இனக்கலவரத்திற்கு தீர்வுக்கான துாதுக் குழு அமைத்து பேச்சு நடத்த நடவடிக்கை மேற்கொண்டேன். நாகா சமூகத்தைச் சேர்ந்த டிங்காலுங்க் காங்மெய் என்ற எம்.எல்.ஏ., மற்றும் மலைவாழ் கமிட்டி தலைவர் அடங்கிய துாதுக்குழு வாயிலாக இரு சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களுடன் பேச்சு நடத்தி, மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசின் உதவியுடன் மேற்கொண்டோம்.
இதையும் படியுங்கள் : சென்னையில் இன்று #Formula4 கார் பந்தயம் தொடக்கம்!
முதலமைச்சர் பொறுப்பில் இருந்து என்னை ராஜிநாமா செய்யுமாறு எதிர்க்கட்சியினர் வலியுறுத்துகின்றனர். நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? என் மீது ஏதேனும் முறைகேடு புகார்கள் உள்ளதா? நான் நாட்டிற்கு அல்லது மாநிலத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டேனா? சட்டவிரோதமாக நம் நாட்டின் எல்லைக்குள் நுழைபவர்களிடம் இருந்து மணிப்பூர் மாநிலத்தை காப்பாற்றினேன். மணிப்பூரையும், மாநில மக்களையும் காப்பது என் கடமை. இன்னும் 6 மாதங்களில் மணிப்பூரில் அமைதி திரும்பும்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.