For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பேடிஎம் வங்கி பிப்.29-ம் தேதியுடன் முடக்கம்! பயன்பாட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன?

04:10 PM Feb 01, 2024 IST | Web Editor
பேடிஎம் வங்கி பிப் 29 ம் தேதியுடன் முடக்கம்  பயன்பாட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன
Advertisement

பேடிஎம் வங்கியை வரும் பிப்ரவரி 29-ம் தேதியுடன் முடக்கி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.  இதனால் பேடிஎம் பயன்பாட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Advertisement

டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய பயன்படும் பேடிஎம் பேமெண்ட் பேங்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்கி ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மார்ச் மாதமே புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதித்து அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தணிக்கையாளர்கள் குழுவை ரிசர்வ் வங்கி நியமித்திருந்தது.  அதன் தொடர்ச்சியாக, தற்போது விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி அந்நிறுவனத்தையே ஒட்டுமொத்தமாக முடக்கியுள்ளது ரிசர்வ் வங்கி.  இதனால், அதன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வங்கிசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

30 கோடி வாடிக்கையாளர்கள்:

டிஜிட்டல்யுகத்தில் பெருநகரங்கள் தொடங்கி சிறு கிராமங்கள் வரை டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை பெருகி விட்டது.  இந்நிலையில், பேடிஎம் , கூகுள் பே, போன் பே உள்ளிட்ட பல யுபிஐ செயலிகள் மக்கள் மத்தியில் பணப் பரிவர்த்தனை செய்வதில் அதிகம் புழக்கத்தில் உள்ள செயலிகளாகும்.

இதன் மூலம் பணம் அனுப்புதல்,  பெறுதல்,  ரீசார்ஜ் செய்தல்,  கடன் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இதில் முக்கிய பங்கு வகிக்கும் பேடிஎம் பேமெண்ட் பேங்க்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்தியா முழுவதும் 30 கோடி வடிக்கையாளர்களை கொண்டிருப்பதாக கூறி வருகிறது.

பேடிஎம் வங்கிக்கு தடை:

இந்த பேடிஎம் செயலி மூலம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை,  கடன் வழங்குதல் உள்ளிட்ட பணப் பரிவர்த்தனை சார்ந்த சேவைகளை செய்து வருகிறது பேடிஎம் பேமென்ட் லிமிடெட். இந்நிலையில் 2022 மார்ச் மாதம் 11ஆம் தேதி மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், பிரிவு 35A வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 1949இன் கீழ் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்குவதாக தெரிவித்தது.

விதிகளுக்கு உட்படாதது,  நிதிநிலை அறிக்கையில் பிரச்னை உள்ளிட்ட காரணங்களுக்காக உடனடியாக அதன் செயல்பாடுகளை முடக்குவதாகவும்,  இதற்கு மேல் புதிய வாடிக்கையாளர்களை இணைக்க கூடாது என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்தது.  அந்நிறுவனத்தின் கணக்கு மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்து விரிவான தணிக்கை அறிக்கையை சமர்ப்பிக்க தணிக்கையாளர் குழுவையும் நியமித்தது.

தொடர்ந்து அந்நிறுவனம் விதிமீறல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறி பிப்ரவரி 29, 2024 க்கு மேல் இந்நிறுவனத்தின் எந்த வித செயல்பாடுகளும் நடைபெறாது என முழுமையாக பேடிஎம் பேமெண்ட் பேங்க்ஸ் லிமிட்டட் நிறுவனத்தை முடக்கி உத்தரவு ஒன்றை (ஜனவரி 31) நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது மத்திய ரிசர்வ் வங்கி.

பேடிஎம் வங்கி பிப்.29-ம் தேதியுடன் முடக்கம்

ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி, பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்கள் ஏற்கனவே தங்களது கணக்கில் வைப்பு வைத்துள்ள பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.  குறிப்பாக வாடிக்கையாளர்களின் சேமிப்பு வங்கி கணக்குகள்,  நடப்பு கணக்குகள், சுங்கச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் ஃபாஸ்ட் டேக்,  நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டுகள் மற்றும் பிற சேவைகளில் உள்ள பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இதற்கு பிப்ரவரி 29 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  அதுவரை செய்யப்படும் பரிவர்த்தனைகளையும் மார்ச் 25ஆம் தேதிக்குள் முடித்து அந்நிறுவனம் கணக்கு சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  ஆனால், பிப்ரவரி 29க்கு மேல் எந்த விதமான பேடிஎம் கணக்குகளிலும் பணம் செலுத்துவதற்கோ,  வரவு வைப்பதற்கோ அல்லது பணப்பரிவர்த்தனை செய்வதற்கோ தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அதேநேரத்தில், பேடிஎம் நிறுவனம் யு.பி.ஐ (UPI ) பரிவர்த்தனைகளை பிப்ரவரி 29-ம் தேதிக்குப் பிறகும் தொடர்வதில் எந்த தடையும் இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேடிஎம் செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடியுமா?

ரிசர்வ் வங்கி உத்தரவால்,  பேடிஎம் பேமெண்ட் வங்கி பணப் பரிவர்த்தனை தளத்தை பயன்படுத்தி வரும் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் உடனடியாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய வங்கி அதிகாரிகள் சங்க முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் பிராங்கோ “இந்த வங்கி மூலம் கடன் பெற்றவர்களில் ஒரு சிலருக்கு முதல் தவணை மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும்.  இப்போது சேவைகள் முடக்கப்பட்டதால் அடுத்த தவணை கிடைக்காமல் அவர்கள் பாதிக்கப்படுவார்கள்” என்கிறார் அவர்.

மேலும்,  பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் எத்தனை மக்களை இந்த செய்தி எட்டும்? அப்படி எட்டாத நிலையில் அவர்களது வைப்புத்தொகை அப்படியே முடங்கிவிடும்.  ரிசர்வ் வங்கியின் சோதனைகள் மற்றும் செயல்பாடுகள் முடிந்து மீண்டும் பேடிஎம் செயல்பாடுகள் தொடங்கினால் மட்டுமே வாடிக்கையாளர்களால் அந்த பணத்தை மீண்டும் பெற முடியும்" என்கிறார் தாமஸ்.

ரிசர்வ் வங்கியின் தடை உத்தரவால், பேடிஎம் வங்கியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பாதிப்பு இருக்கும்.  அதேநேரத்தில் பேடிஎம் செயலியை பயன்படுத்தி யுபிஐ, பேடிஎம் வாலட் போன்ற சேவைகளை எந்த சிக்கலும் இன்றி தொடர்ந்து பயன்படுத்தலாம்.

Tags :
Advertisement