சொல்லி அடித்த பவன் கல்யாண்... திருப்பதி டூ பழனி மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை!
கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆன்மீக யாத்திரை மேற்கொண்டார். அப்போது பழனியில்,
“இதற்கு முன் பழனி - திருப்பதி இடையே ஆந்திர மாநில போக்குவரத்து கழக பேருந்து ஓடிக்கொண்டிருந்தது. கொரோனா காலத்தில் பழனி, திருப்பதி இடையே நேரடி பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின் அது தொடரவில்லை” என்று அங்குள்ள பொதுமக்கள் அவரிடம் கூறினர். விரைவில் உங்கள் கோரிக்கையை ஏற்று திருப்பதி - பழனி இடையே பேருந்து போக்குவரத்து
துவக்கப்படும் என்று அப்போது பவன் கல்யாண் கூறி இருந்தார்.
அதன் அடிப்படையில் இன்று திருப்பதியில் இருந்து பழனிக்கு ஆந்திர மாநில
போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து சேவை துவங்கியது. அதை மங்களகிரியில் இருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார் துணை முதலமைச்சர் பவன் கல்யாண்.
இதன்மூலம் இனிமேல் தினமும் இரவு 8 மணிக்கு திருப்பதியில் தொடங்கி பழனிக்கு காலை 7 மணிக்கும், பழனியில் இரவு 8 மணிக்கு தொடங்கி காலை 7 மணிக்கு திருப்பதிக்கும் ஆந்திர மாநில போக்குவரத்து கழக பேருந்து இயங்கும்.
பழனி திருப்பதி இடையே போக்குவரத்து கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 480 ஆகவும், சிறியவர்களுக்கு ரூ. 360 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.