பவன் கல்யாண் வெற்றியால் பெயரை மாற்றிக் கொண்ட முன்னாள் அமைச்சர்!
பிதாபுரம் தொகுதியில் பவன் கல்யாண் வெற்றிப் பெற்றதையடுத்து தனது பெயரை ‘பத்மநாப ரெட்டி’ என மாற்றியுள்ளார் முன்னாள் அமைச்சர் முத்ரகடா பத்மநாபம்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலோடு ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைப்பெற்றது. இந்த சட்டமன்ற தேர்தலில் ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் பவன் கல்யாணை எதிர்த்து ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான வங்கா கீதா போட்டியிட்டார்.
இந்த தொகுதியில் பவன் கல்யாண் வெற்றிப் பெற்றால் தனது பெயரை மாற்றிக் கொள்வதாக காபு சமுதாயத்தைச் சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான முத்ரகடா பத்மநாபம் சவால் விடுத்திருந்தார். தனது பெயரை பத்மநாபம் என்பதற்கு பதிலாக முத்ரகடா பத்மநாப ரெட்டி என மாற்றிக் கொள்கிறேன் என்றும் கூறியிருந்தார்.
இதனையடுத்து அத்தொகுதியில் 65,000 வாக்குகள் வித்தியாசத்தில் பவன் கல்யாண் அபார வெற்றி பெற்றார். இந்நிலையில் தனது பெயரை ‘பத்மநாப ரெட்டி’ என மாற்றிக் கொண்டுள்ளார் முன்னாள் அமைச்சர் முத்ரகடா பத்மநாபம்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
“எனது பெயரை மாற்றும்படி யாரும் என்னை வற்புறுத்தவில்லை. எனது சொந்த விருப்பத்தின் பேரில் நான் அதை மாற்றினேன். இருப்பினும், ஜனசேனை தலைவரின் ரசிகர்களும், ஆதரவாளர்களும் எனக்கு தவறான குறுஞ்செய்திகளை அனுப்பினர்” எனக் கூறியுள்ளார்.