சனாதனம் குறித்த பேச்சு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக பாட்னா நீதிமன்றம் சம்மன்!
சனாதனம் குறித்து பேச்சுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ‘சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றோடு சனாதன தர்மத்தை ஒப்பிட்டும் அவர் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து அமைச்சர் உதயநிதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. வினித் ஜிண்டால் என்பவரும் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் வாதிட்ட தமிழ்நாடு அரசு “ விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்படும் இத்தகைய மனுக்களை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. நாடு முழுவதும் 40க்கும் அதிகமான வழக்குகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை ஒரு விளம்பர நோக்கத்துடனே இவர்கள் செய்கிறார்கள். மனு தாக்கல் செய்துவிட்டு பிறகு வெளியே வந்து ஊடகங்களிடம் பேட்டி அளிப்பதற்காக தான் இதை இவர்கள் கடைபிடிக்கிறார்கள். இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என கேட்டுக் கொண்டது.
இதன் பின்னர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ” சனாதனம் குறித்து நான் பேசியது, பேசியது தான். நான் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று சொன்னார்கள். நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. எது வந்தாலும் சட்டரீதியாக சந்தித்து கொள்வோம். நான் எந்த ஒரு மதத்தையும் இழிவுபடுத்தி பேசவில்லை “ என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த நிலையில் சனாதனம் குறித்த பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி பிப்ரவரி 13ம் தேதி நேரில் ஆஜராக பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சனாதனம் குறித்து பேசிய விவகாரத்தில் எம்.பி., எம்எல்ஏ-களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த ஆணையை பிறப்பித்துள்ளது.
அமைச்சர் உதயநிதியின் பேச்சு இந்துகளின் உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கறிஞர் கவுசலேந்திர நாராயணன் செப்டம்பர் 4ஆம் தேதி வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் பிப்ரவரி 13-ல் உதயநிதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.