சென்னை அழைத்துவரப்பட்ட ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய பயணிகள்!
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிக்கொண்ட பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு சென்னை அழைத்துவரப்பட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, திருச்செந்தூரில் இருந்து சென்னையை நோக்கி சுமார் 800க்கும் மேற்பட்ட பயணிகளுடன் செந்தூர் விரைவு ரயில் புறப்பட்டது. தென் மாவட்டங்களில் அதீத கனமழை காரணமாக, வெள்ளம் ஏற்பட்டதால், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. ரயில் தண்டவாளங்களும் வெள்ளத்தில் சேதமடைந்ததால், அந்த ரயில் எந்த பக்கமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், 3 நாட்களாக ஒரே இடத்தில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. பயணிகள் உணவு, குடிநீர் இன்றி சிக்கித் தவித்தனர். பின்னர் அங்கிருந்து முதற்கட்டமாக 150 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து, ரயில் நிலையத்தில் சிக்கிக்கொண்டிருந்த பயணிகளுக்கு அருகில் இருந்த புதுப்பட்டி, ஸ்ரீவைகுண்டம் கிராம மக்கள் அவர்களது வீடுகளில் இருந்து உணவுப் பொருட்களை எடுத்து வந்து அங்கேயே சமைத்து அவர்களுக்கு உணவு அளித்து வந்தனர்.
அந்த பகுதியில், சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டதாலும், தொடர்ந்து வெள்ளப்பெருக்கு அதிகம் இருந்ததாலும் அவர்களை படகுகள் மூலம் மீட்டு அழைத்து வருவதிலும் சிரமம் இருந்தது. எனவே விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அந்த ரயிலில் இருந்தவர்களுக்கு உணவு அளிக்கப்பட்டது. இதனிடையே மேலும் பலர் மீட்கப்பட்டனர். அவர்களை முழங்கால் அளவுக்கு குறைவாக உள்ள தண்ணீரில் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களாக அரசு நடவடிக்கைகள் எடுத்து பயணிகளை மீட்டது. மேலும் நேற்று ரயிலில் இருந்த அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டு ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து அருகில் உள்ள கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து பேருந்து மூலம் வாஞ்சி மணியாச்சிக்கு அவர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து இரவு 11 மணியளவில் சிறப்பு ரயில் மூலம் வழக்கமாக செந்தூர் விரைவு ரயில் இயக்கப்படும் பாதை வழியாக பயணிகள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று மதியம் 1 மணி அளவில் சிறப்பு ரயில் சென்னை வந்தடைந்தது. இதில் ஏராளமான பயணிகள் வந்தடைந்தனர். அவர்களுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பயணிகள்,
“இரு தினங்கள் மீட்புப் பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் இருந்தது. அந்த அளவிற்கு அங்கு வெள்ளம் பாய்ந்து ஓடியது. இருப்பினும் மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். அருகில் இருந்த கிராமத்தினர் எங்களுக்கு பெரிய அளவில் உதவினர். நேற்று முதல் எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் முழுமையாக கிடைத்தது. நாங்கள் பாதுகாப்பாக திரும்பி உள்ளோம். மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் மற்றும் எங்களை மீட்க உதவிய அனைவருக்கும் நன்றி” என தெரிவித்தனர்.