பயணிகள் கவனத்திற்கு… பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்!
நாளை (ஜூன் 17) பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று (ஜூன் 15) சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் உலகம் முழுவதும் நாளை பக்ரீத் கொண்டாடப்பட இருக்கிறது.
இந்நிலையில் சென்னை மெட்ரோ நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை திங்கட்கிழமை அட்டவணை அல்லாமல் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது;
“நெரிசல் மிகு நேரமான காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 முதல் 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.