அமெரிக்காவில் பயங்கரம் : நேருக்கு நேர் மோதிய பயணிகள் விமானம்-ஹெலிகாப்டர் !
அமெரிக்காவில் வாஷிங்டன் டிசியில் சிறிய ரக பயணிகள் விமானமும், ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி விபத்திற்குள்ளானது. ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம் ( Ronald Regan Washington National Airport ) அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியுள்ளது.
இந்த விபத்தின் போது விமானம் மற்றும் ஹெலிகாப்டர் இரண்டும் போடோமாக் என்ற ஆற்றில் விழுந்த நிலையில் தற்போது மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விமான விபத்தையடுத்து ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் அனைத்து விமானங்களின் புறப்பாடுகளும் தரையிறக்கங்களும் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (எஃப்ஏஏ) கூறுகையில், பி.எஸ்.ஏ. ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான CRJ700 சிறிய ரக பயணிகள் விமானம் தாமதமாக விமான நிலையத்தை நெருங்கும்போது சிகோர்ஸ்கை H-60 என்ற ராணுவ ஹெலிகாப்டர் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக எஃப்ஏஏ மற்றும் என்டிஎஸ்பி விசாரணை நடத்தும் என்றும் என்டிஎஸ்பி விசாரணையை வழிநடத்தும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் போடோமேக் நதிக்கு அருகில் உள்ள ரீகன் தேசிய விமான நிலையத்தில் சிறிய விமானம் கீழே விழுந்தது உறுதி செய்யப்பட்டது என்று கொலம்பியா தீயணைப்பு மற்றும் அவசர மருத்து சேவைகள் துறை தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் 64 பேரும், ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்களும் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.