சக்கர நாற்காலி வழங்காததால் பயணி உயிரிழந்த விவகாரம் - ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்!
மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி வழங்காமல் முதியவர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து கடந்த 12-ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பாபு பட்டேல் (80) என்ற முதியவர், தனது மனைவி நர்மதா பென்னுடன் (76) மும்பை வந்துள்ளார். டிக்கெட் எடுக்கும் போதே இரண்டு வீல் சேர்களுக்கு முன்பதிவு செய்துள்ளார். ஆனால் ஒரு வீல் சேர் மட்டுமே இருந்ததால் அதனை மனைவிக்கு கொடுத்து விட்டு, 1.5 கி.மீ தூரம் நுழைவு பகுதிக்கு நடந்தே சென்றுள்ளார்.
நுழைவு வாயிலை அடைந்தவுடன் மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை அருகில் இருந்த விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சோதனையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விமான நிலையங்களில் பயணிகளுக்கு போதுமான சக்கர நாற்காலிகளை வைத்திருக்க வேண்டுமென அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சிவில் ஏவியேஷன் ரெகுலேட்டர் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், இந்த விதிமுறைகளைக் கடைபிடிக்கத் தவறியதற்காக, விமானப் போக்குவரத்து இயக்குநரகம், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்த நிறுவனம் இன்னொரு சக்கர நாற்காலிக்காக காத்திருப்பதை விட தன் மனைவியுடன் நடந்து செல்வதாக அவர் தெரிவித்ததாக கூறியுள்ளது. நிறுவனத்தின் விளக்கம் ஏற்கும்படியாக இல்லை எனவும், விமான விதிகளை பின்பற்றவில்லை எனவும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து விதிகள், 1937இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறியதால், விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக டிஜிசிஏ தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும் தவறு செய்த ஊழியருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் டிஜிசிஏ தெரிவித்துள்ளது.