இன்று முதல் அமலுக்கு வருகிறது ஃபாஸ்டேக் புதிய நடைமுறை!
வாகனங்களுக்கான ஃபாஸ்டேக் தொடர்பான புதிய நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில், ‘ஃபாஸ்டேக்’ என்ற முறையைப் பயன்படுத்தி ரேடியோ அலைவரிசை அடையாள தொழில்நுட்பத்தின் தானியங்கி இயந்திரம் மூலம் தாமாக கட்டணத்தை வங்கிக் கணக்கிலிருந்து வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கட்டாயமாக்கப்பட்டது.
இதன் மூலம் ஃபாஸ்டேக் ஸ்டிக்கா் ஒட்டிய வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திராமல் பயணத்தைத் தொடர முடியும். இந்த சூழலில் என்.பி.சி.ஐ., எனப்படும் தேசிய பண பரிவர்த்தனை வாரியம், இது தொடர்பான சில நடைமுறைகளை அறிவித்துள்ளது. இவை, இன்று முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி, பாஸ்டேக் பயன்படுத்துவோர், கே.ஒய்.சி., எனப்படும் தங்களுடைய சுயவிபரக் குறிப்புகளை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபரங்களை, ஃபாஸ்டேக் சேவை வழங்கும் நிறுவனங்கள் அக்.31க்குள் பெற வேண்டும். இல்லாதபட்சத்தில், அந்த ஃபாஸ்டேக் செல்லாததாகிவிடும்.அதாவது, மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் ஃபாஸ்டேக்குகள் வாங்கியவர்கள் தங்கள் கேஒய்சி விவரங்களை அக்.31-க்குள் இணைக்க வேண்டும். அதேநேரம் ஐந்து வருடங்களுக்கும் மேல் ஆக்கிவிட்டது என்றால், ஃபாஸ்டேக்குகளை முழுமையாக மாற்ற வேண்டும். இதனையும் வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் செய்ய வேண்டும். மேலும், ஃபாஸ்டேக்குடன் வாகனத்தின் பதிவு எண் மற்றும் சேஸ் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும். அத்துடன் ஃபாஸ்டேக்கை மொபைல் எண்ணுடண் இணைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.