Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்" - பாமக தலைவர் #AnbumaniRamadoss 

04:07 PM Sep 30, 2024 IST | Web Editor
Advertisement

காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அக்டோபர் 2 ஆம் தேதி தருமபுரி மாவட்ட கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

"தமிழ்நாட்டின் வறண்ட மாவட்டமாகவும், வேலைவாய்ப்பற்ற பின்தங்கிய மாவட்டமாகவும் திகழும் தருமபுரி மாவட்டத்தை வளம் கொழிக்கும் மாவட்டமாக மாற்ற தருமபுரி மற்றும் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பத்தாண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் அதை செயல்படுத்த தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

தருமபுரி மற்றும் காவிரி குடிநீர் திட்டத்திற்கு ஆண்டுக்கு 3 டி.எம்.சி மட்டுமே நீர் தேவைப்படும். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக பலநூறு டி.எம்.சி காவிரி நீர் வீணாக கடலில் கலக்கும் நிலையில், இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. ரூ.650 கோடி மட்டுமே செலவாகும் இந்தத் திட்டத்தால், ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அதுமட்டுமின்றி, 15 லட்சம் பேருக்கு குடிநீர் வசதி கிடைக்கும். இதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தருமபுரி மாவட்டம் வளம் பெறும்.

தருமபுரி தொகுதியின் மக்களவை உறுப்பினராக 2014 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, இந்தத் திட்டத்தை நான் தயாரித்தேன். இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரி 19.09.2018 அன்று தருமபுரியில் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்த நான், 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று, அவற்றை 05.03.2019 இல் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினேன். இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இத்திட்டம் குறித்து பலமுறை வலியுறுத்தினேன்.

ஆனால், அதனால் எந்தப் பயனும் ஏற்படாத நிலையில், இந்தத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஓகனேக்கலில் தொடங்கி பாப்பிரெட்டிபட்டி வரை 3 நாட்கள் எனது தலைமையில் மிகப்பெரிய எழுச்சிப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

அதைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி எனது தலைமையில் பாமக மாபெரும் போராட்டத்தை நடத்தியது. ஆனால், பல நூறு கோடியை வீணாக செலவழிக்கும் அபது, ஒட்டுமொத்த மாவட்டமும் பயன் பெறும் தருமபுரி - காவிரி உபரி நீர்த் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.650 கோடியை செலவழிக்க மறுக்கிறது.

இத்தகைய சூழலில் தருமபுரி - காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அக்டோபர் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி அழைப்பு விடுத்திருக்கிறது.

இந்தத் திட்டம் குறித்து அரசுக்கு கூடுதல் அழுத்தம் தரும் வகையிலும் அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நாளை மறுநாள் அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்தில் தருமபுரி - காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து ஊராட்சிகளிலும் தீர்மானம் நிறைவேற்ற பாமகவினரும், மக்களும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tags :
Anbumani Ramadossnews7 tamilPattali makkal KatchiPMKtamil naduTN Govt
Advertisement
Next Article