பர்வதமலை : காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பெண்கள்!
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பர்வதமலை உள்ளது. இந்த மலை உச்சியில் ஸ்ரீ பிரம்பராம்பிகை உடனுறை மல்லிகாஜூஸ்னேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து பௌர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்களும் பிற நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் விடியற்காலை சென்னை திருவேற்காடு பகுதியில் இருந்து வேனில் 13 பேர் பருவதமலை உச்சிக்கு செல்ல பச்சையம்மன் கோயிலில் இருந்து வீரபத்திரன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர் மதியம் அதிக மழை பெய்ததால் கீழே இறங்கியுள்ளனர். அப்போது மாலை 6 மணிக்கு பிறகு இரண்டு ஆண் இரண்டு, பெண் ஒரு குழந்தை என ஒரு குழுவாக வந்துள்ளனர்.
அப்போது மழை தீவிரமடைந்ததால் ஓடையில் அதிகளவு காட்டாறு வெள்ளம் வந்துள்ளது. இதனை சற்றும் எதிர்பாராமல் வந்தபோது தங்கதமிழ்ச்செல்வி (50), இந்திரா (35) ஆகிய இரண்டு பேர் வெள்ளதில் சிக்கியுள்ளனர். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஓடையினுல் இறங்காமல் காத்திருந்துள்ளனர்.
இதுகுறித்து பச்சையம்மன் கோயில் அருகே பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஓடையின் குறுக்கே பெரிய வட கயிறு கட்டப்பட்டு பக்தர்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் கொண்டு வந்தனர்.
தகவல் அறிந்த தொகுதி எம்எல்ஏ சரவணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்டுப் பணி குறித்து ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட தீயணைப்பு மற்றும் பேரிடர் துறை அலுவலர் சரவணனிடம் சம்பவம் குறித்து கேட்டபோது மீட்பு படையினர் 20க்கும் மேற்பட்டோர் கால்வாயிலும் மற்றும் கோயில் மாதிமங்கலம் ஏரியிலும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து தாசில்தார் தேன்மொழியிடம் மலைக்குச் சென்று வந்த பக்தர்களுக்கு உணவு, உடை மற்றும் தேவையான வசதிகளை செய்து கொடுக்கும்படி உத்தரவிட்டார். மேலும் அங்கு பதட்டம் நீடித்ததால் போளூர் டிஎஸ்பி மனோகரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் சிவா, தீயணைப்பு அலுவலர் சரவணன் மற்றும் போளூர் இன்ஸ்பெக்டர் அல்லிராணி உள்ளிட்ட குழுவினர் ஆலோசனை செய்து தேடும் பணியை முடக்கி விட்டுள்ளனர்.