நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் - அமைச்சர் உதயநிதி பதிவு!
மக்களவையில் மர்ம நபர்கள் புகுந்து புகைக்குண்டுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை நடைபெற்று கொண்டிருந்தபோது பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறி நுழைந்த 2 இளைஞர்கள், புகை குப்பிகளை வீசினர். இதனால் அங்கிருந்த எம்.பி-க்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.
அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களே மடக்கிப் பிடித்த நிலையில், பின்னர் இருவரும் அவை பாதுகாவலர்களால் கைது செய்யப்பட்டனர். அதேவேளையில், மக்களவையின் உள்ளே நுழைந்தவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்திற்கு வெளியே புகை குப்பிகளை வீசிய மகாராஷ்டிராவை சேர்ந்த நீலம் என்ற பெண்ணும், அன்மோல் ஷிண்டே என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
அத்துமீறி உள்ளே நுழைந்தவர்களில் மனோ ரஞ்சன் என்பவர் மைசூருவை சேர்ந்த பொறியியல் மாணவர் என்பதும், மற்றொருவர் சாகர் சர்மா என்பதும் தெரியவந்திருக்கிறது.மேலும், மைசூர் தொகுதி பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரை கடிதத்தை காண்பித்து இருவரும் மக்களவைக்குள் நுழைந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மக்களவையில் மர்ம நபர்கள் புகுந்து புகைக்குண்டுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பின்மையையே காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் நடந்த இந்த சம்பவம் கண்டனத்துக்குரியது. இது தொடர்பாக உடனடியாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காத வகையில், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.