நாடாளுமன்ற தேர்தல் 2024 - தலைமைச் செயலகத்தில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் 2-வது நாளாக ஆலோசனை!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து
இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகின்றன. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று (பிப்.06) சென்னை வந்தனர். இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மல்லே மாலிக், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ மற்றும் தேர்தல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்றும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த கூட்டத்தில வாக்களர் பட்டியல், பதட்டமான வாக்குச்சாவடிகள், மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் நிலை, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் பணப்பட்டுவாடா, ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்துச் செல்வது, தேர்தல் விதிமுறைகளை மீறிய செலவினங்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தலைமைச் செயலகத்தில் துணை தேர்தல் ஆணையர் அஜய் பாதூ தலைமையில் , தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மலய் மாலிக், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், புதுச்சேரி டிஐஜி ஆகியோர் கலந்து கொண்டு புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.
இதனையடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்
ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனர். இதில் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை, ஆவடி , தாம்பரம் காவல் ஆணையர்கள் நேரடியாக கலந்து கொண்டுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கான ஏற்பாடுகள்,
வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்கள், ஆகியவற்றுக்கான
பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர். பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குதல், வெப் கேமராக்கள் மூலம் கண்காணிப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள
உள்ளனர். இன்று காலை துவங்கிய ஆலோசனை மாலை வரை நடைபெற உள்ளது.