மக்களவை தாக்குதல் விவகாரம் - பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவிடம் வாக்குமூலம் பெற போலீசார் முடிவு!
நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில், பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவிடம் வாக்குமூலம் பெற டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், டிச. 13 ம் தேதி பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2 நபர்கள் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்த அந்த நபர்கள், கண்ணீர் புகை குண்டு வீசும் குப்பிகள் போன்ற பொருளை வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியாகி மக்களவை முழுவதும் பரவியது.
அந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே மஞ்சள் மற்றும் சிவப்பு நிற புகையை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நால்வரும் சர்வாதிகாரத்தை அனுமதிக்கமாட்டோம், ஜெய்பீம், ஜெய் பாரத் என்று உரத்த குரலில் கோஷங்கள் எழுப்பினர். அவர்கள் 4 பேர் மீதும் தீவிரவாத தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அத்துமீறி நுழைந்தவர்களில் ஒருவருக்கு மைசூரு தொகுதி பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா அனுமதி சீட்டு வழங்கியுள்ளார். இந்த நிலையில், நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவிடம் வாக்குமூலம் பெற டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் பிரதாப் சிம்ஹாவின் தனி உதவியாளரிடம் விசாரணை நடத்த சிறப்பு பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.