நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் - நாளை முதல் தொடக்கம்..!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத் தொடரில் 19 நாள்களில் 15 அமர்வுகள் நடைபெறவுள்ளன.
இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றான 3 மசோதாக்கள் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் இந்த கூட்டத் தொடரில் கொண்டு வரப்படவுள்ளன. இக்கூட்டத்தொடரை முன்னிட்டு, நாடாளுமன்றத்தின் நூலகக் கட்டடத்தில் சனிக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நடத்தினார்.
இந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், கௌரவ் கோகோய், பிரமோத் திவாரி, திரிணாமூல் காங்கிரஸின் சுதீப் பந்தோபாத்யாய், தேசியவாத காங்கிரஸின் ஃபௌசியா கான், புரட்சிகர சோஷலிச கட்சியின் என்.கே.பிரேமசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தின்போது, குற்றவியல் சட்டங்களுக்கு இந்திக்கு பதிலாக ஆங்கிலத்தில் பெயரிடும் கோரிக்கையை எதிர்க்கட்சிகள் மீண்டும் வலியுறுத்தின. மணிப்பூர் பிரச்னை, விலைவாசி உயர்வு, எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து மத்திய விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உள்ளிட்ட விவகாரங்களும் எதிர்க்கட்சிகள் தரப்பில் எழுப்பப்பட்டது.
குற்றவியல் சட்டங்களுக்கு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என்று பெயர் சூட்டியுள்ளதன் மூலம் இந்தி திணிப்பில் மத்திய அரசு ஈடுபடுவதாக என்.கே.பிரேமசந்திரன், அதிமுகவின் தம்பிதுரை ஆகியோர் குற்றம்சாட்டினர்.
நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், திரிணாமூல் காங்கிரஸ் பெண் எம்.பி. மஹுவா மொய்த்ராவின் பதவியைப் பறிக்க பரிந்துரைக்கும் மக்களவை நெறிமுறைகள் குழுவின் அறிக்கை மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ் வலியுறுத்தியது. இந்த விவகாரங்கள், குளிர்கால கூட்டத்தொடரில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்ததாவது..
”குளிர்கால கூட்டத்தொடரில் 19 மசோதாக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே 37 மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த கூட்டத் தொடரில் 12 மசோதாக்கள் பரிசீலனையில் உள்ளன. இதுதவிர 7 மசோதாக்கள் அறிமுகம், பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்துக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளன” என பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.