இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம் - நீட் முறைகேடு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!
இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூட உள்ள நீட் முறைகேடு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைத்துள்ளது. இதனையடுத்து 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24 ஆம் தேதி தொடங்கியது. அன்று பிரதமர் மோடி உள்பட, உறுப்பினர்கள் பலர் எம்பியாக பதவியேற்றனர். அன்று பதவியேற்காத பலரும் இரண்டாவது நாளாக ஜுன் 25 ஆம் தேதி பதவியேற்றனர்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 எம்பிக்களும் பதவியேற்றனர். பதவியேற்பின் போது ஒவ்வொரு எம்பியும் ஒவ்வொரு முழக்கங்களை கூறி பதவிப் பிரமாணம் செய்தனர். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இந்நிலையில் மொத்தம் 51 நிமிடங்கள் உரையாற்றிய குடியரசு தலைவரின் உரையாற்றினார்.
அப்போது, போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் குறித்து நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 28) 'நீட்' விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், மக்களவை அலுவல்கள் முடங்கின. மாநிலங்களவையில் அமளிக்கு இடையே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, விவாதம் தொடங்கியது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று மீண்டும் கூட இருக்கும் நிலையில், 'நீட்' தேர்வு முறைகேடு, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், அக்னிபாத் திட்டம் உள்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இன்று மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் தாக்கல் செய்து, விவாதத்தைத் தொடங்கிவைக்கவுள்ளார். இந்த விவாதத்துக்காக 16 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விவாதத்தின்போது, எதிர்க்கட்சிகள் எந்த விவகாரத்தை எழுப்பினாலும், அரசுத் தரப்பில் பதிலளிக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது. எனவே, நீட் முறைகேடு உள்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.