'பரியேறும் பெருமாள்' பட புகழ் கருப்பி #Dog உயிரிழப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த கருப்பி என்கிற செல்லப்பிராணி உயிரிழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இயக்குநர் மாரி செல்வராஜின் முதல் படமாக உருவான திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’ B.A.B.L. இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படம் தயாரிக்கப்பட்டது. இப்படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு, இயக்குநர் மாரிமுத்து, பூ ராமு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் அனைவராலும் கொண்டாடப்பட்டு ஒரு புதிய விவாதத்திற்கு அழைத்துச் சென்றது.
பரியேறும் பெருமாள் படத்தில் ஆதிக்க சாதி சமூகத்தை சார்ந்த ஜோவும், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் உள்ள பரியனும் நட்பாக பழகுகிறார்கள். அவர்களை ஆதிக்க சாதி சமூகம் எப்படி நடத்துகிறது, எப்படி ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குகிறது என்பதை மிக நேர்த்தியாக பொது சமூகத்தின் முன் காட்சிப்படுத்தியிருப்பார் மாரி செல்வராஜ்.
”நீங்க நீயாக இருக்கிற வரை நாங்கள்ளாம் நாயாக இருக்கனும்னு நீங்க நினைக்கிற வரை இங்க எதுவுமே மாறாது” என பரியன் சொல்லும் வசனமும், கிளைமாக்ஸ் காட்சி ஒரு தேயிலை நீர் மற்றும் ஒரு பால் டீ அடங்கிய இரண்டு டம்ளர்கள் என அப்படத்தில் சமூகத்தின் அவல நிலை மற்றும் சமூகத்தில் புரையோடி இருக்கிற சாதிய ஆணவத்தை பொட்டில் அறைந்தார்போல் பேசியிருப்பார் மாரி செல்வராஜ்.
இதேபோல இப்படத்தில் கருப்பி எனும் செல்லப்பிராணி நடித்திருந்தது. அந்த செல்லப்பிராணி படத்தின் கதையோட்டத்தை உணர்ச்சிப்பூர்வமான கட்டத்திற்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகித்தது. இதனால் இப்படத்தில் இடம்பெற்றிருந்த கருப்பி எனும் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பரியேறும் பெருமாள் படத்தில் கருப்பி கதாபாத்திரத்தில் நடித்த செல்லப்பிராணி உயிரிழந்துள்ளது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் வெடி சத்தத்தை கேட்டு தெறித்து ஓடிய கருப்பி நாய் சாலையில் வந்த வண்டி மீது மோதி உயிரிழந்துள்ளதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.