#ParisParalympics | சாதனை படைத்த 7 மாத கர்ப்பிணி!
பிரிட்டனைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனை ஜோடி கிரின்ஹாம் பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாராலிம்பிக் தொடர் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் செப்.8ஆம் தேதி வரை என மொத்தம் 11 நாட்கள் நடைபெறுகின்றன. பாராலிம்பிக்ஸில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியில், பிரிட்டனைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனை ஜோடி கிரின்ஹாம் (31) கலந்துக்கொண்டார். 7 மாத கர்ப்பிணியான இவர் நேற்று நடைபெற்ற வில்வித்தை இறுதிப் போட்டியில் போயிபி பீட்டர்சனை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம், இவர் விளையாட்டுத் துறையில் பங்கேற்று பதக்கம் வென்ற 7 மாத கர்ப்பிணி என்ற பெருமையை பெற்றுள்ளார். இது குறித்து ஜோடி கிரின்ஹாம் பேசுகையில், தன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாக தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், எகிப்திய வீராங்கனை நடா ஹஃபீஸ் 7 மாத கர்ப்பிணியாக வாள்வீச்சுப் போட்டியில் கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர் பதக்கம் வெல்லவில்லை.