பாரிஸ் ஒலிம்பிக்: வினேஷ் போகத் விவகாரத்தில் 3வது முறையாக தீர்ப்பு ஒத்திவைப்பு!
வினேஷ் போகத் வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில், வழக்கு மீண்டும் 3வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் நகரில் கடந்த 26-ம் தேதி தொடங்கிய 33-வது ஒலிம்பிக் போட்டி, 17 நாள்கள் நடைபெற்ற நிலையில் நேற்று (ஆக. 12) இரவு நிறைவடைந்தது. முன்னதாக பாரிஸ் ஒலிம்பிக்கில் நடைபெற்ற பெண்கள் மல்யுத்தத்தின் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் வினேஷ் போகத் கலந்து கொண்டார். அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்ற அவர் இறுதிப் போட்டி வரை முன்னேறினார்.
தங்கப் பதக்கத்துக்காக காத்திருந்த அவர், 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தார். இந்த சூழலில் ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டிக்கு முன்பாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் அதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் முறையிட்டார். இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.
வினேஷ் போகத் தரப்பில், “ஒரே நாளில் அடுத்தடுத்த போட்டிகளில் வினேஷ் போகத் கலந்து கொண்ட நிலையில், மறுநாள் அவரது எடை 3 கிலோ அதிகரித்தது. வினேஷ் போகத் தனது எடையை குறைக்க இரவு முழுவதும் உறங்காமல் ஜாகிங் மற்றும் ஸ்கிப்பிங் செய்தார். மேலும் தனது முடியை வெட்டி, உடலில் இருந்து இரத்தம் எடுக்கும் அளவிற்கு கூட சென்றனர். 2வது நாள் காலை அவரது எடை 100 கிராம் அதிகரித்த நிலையில், அதனால் வினேஷுக்கு எந்தவொரு லாபமும் இல்லை. இது வீரர்களின் எடையில் 0.1 முதல் 0.2% வரை மட்டுமே. கோடைக்காலத்தில் மனித உடல் வீங்குவது எளிதாக ஏற்படலாம்.
கோடைக்காலத்தில் இயல்பாகவே எடை அதிகரிக்கும். ஒரே நாளில் 3 முறை போட்டியிட்டதும் எடை அதிகரிப்பிற்கு காரணமாக இருக்கலாம். போட்டிகளுக்குப் பிறகு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எடுத்துக்கொண்ட உணவும் இதற்குக் காரணமாக இருக்கலாம். வீரர் எந்தவொரு மோசடியும் செய்யவில்லை. இருந்தாலும் அவரால் இறுதிப் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. அவரது கடின உழைப்பைக் கருத்தில் கொண்டு வெள்ளிப் பதக்கத்தையாவது வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.
வினேஷ் போகத் வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, வழக்கு மீண்டும் 3வது முறையாக ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கு 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.