வெண்கல பதக்கத்துடன் நாடு திரும்பிய இந்திய ஹாக்கி அணி - டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணி வீரர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டி நாளை (ஆகஸ்ட் 11) வரை நடைபெறவுள்ளது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் – வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றது. ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது இந்திய அணி. ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தியது. இதனால் இந்திய ஹாக்கி அணியினருக்கு பாராட்டுகள் குவிந்தன. குறிப்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்து கூறினர்.