பாரிஸ் ஒலிம்பிக் போட்டி : வில்வித்தை காலிறுதியில் தீபிகா குமாரி தோல்வி!
ஒலிம்பிக் தொடரில் மகளிருக்கான வில்வித்தை தனிநபர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி 4-6 என்ற கணக்கில் தென் கொரியாவின் நாம் சுஹியோனிடம் தோல்வியை தழுவினார்.
சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரிஸ் நகரில் கடந்த 26ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரிஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்த தொடரில் இந்தியா இதுவரை 3 பதக்கங்கள் வென்றுள்ளது.
இந்நிலையில், இந்த ஒலிம்பிக்கில் போட்டியில் அணிகள் பிரிவிலும் இந்தியாவின் ஆடவர், மகளிர் அணிகள் காலிறுதியில் தோற்று வெளியேறிவிட்டன. மகளிர் தனிநபர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், பஜன் கௌர் தோல்வியை தழுவினார். 27-24 புள்ளிகள் பெற்று முதல் செட்டில் 2-0 என முன்னிலை வகித்தார்.இரண்டாவது செட்டில் 27-27 என்ற கணக்கில் சமன் செய்தார். மூன்றாவது செட்டில் 26-25 புள்ளிகளுடன் 5-1 என்ற நிலையில் தீபிகாவின் ஆதிக்கம் தொடர்ந்தது.
இதையும் படியுங்கள் : "மூவர்ணக் கொடியை வீடுகளில் ஏற்றி செல்ஃபியை பதிவேற்றுங்கள்" - மக்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்!
ஆனால், 4-வது சுற்றில் 3-5 என்ற கணக்கில் ஜெர்மனி வீராங்கனை கை ஓங்கியது. 5-ஆவது செட் 27-27 என சமனில் முடிய, 6-4 என்ற கணக்கில் ஜெர்மனி வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார். இந்நிலையில், தீபிகா குமாரி பதக்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இன்று (ஆகஸ்ட்- 3ம் தேதி) மாலை நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் தீபிகா குமாரி தென் கொரியாவின் நாம் சுஹியோனிடம் வீழ்ந்தார். காலிறுதிப் போட்டியில், முதல் செட்டை கைப்பற்றி அசத்திய தீபிகா, 5-வது மற்றும் இறுதி செட் சுற்றில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார். காலிறுதிச் சுற்றில் 4 - 6 என்ற செட் கணக்கில் தீபிகா குமாரி தோல்வியடைந்து வெளியேறினார்.